காஸா கூடாரம் ராய்ட்டர்ஸ்
உலகம்

தொடரும் போர் | காஸாவுக்கு திரும்பும் மக்கள்.. தற்காலிக கூடாரங்கள் அமைப்பு!

இஸ்ரேலில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காஸாவுக்கு திரும்பும் மக்களுக்காக தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Prakash J

இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னை என்பது இன்று நேற்றல்ல.. பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இதில் காஸாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டது.

அதன்படி, கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஹமாஸ் படையினர் தங்கள் வசம் இருந்த 3 பணயக் கைதிகளை விடுவித்தனர். பதிலுக்கு இஸ்ரேலும் 90 பாலஸ்தீனர்களை விடுவித்தது. அடுத்தகட்டமாக ஹமாஸ் அமைப்பு நாளை (ஜனவரி 25), தங்கள் பிடியில் உள்ள 4 பணயக் கைதிகளை விடுவிக்க உள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்

இந்த நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்குள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் படையினர், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மூலம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனால், ஜெனின் பகுதியில் அகதிகள் முகாம்களில் தங்கிருக்கும் மக்கள், அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். காஸா போரில் கிடைத்த பாடங்களை வைத்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் படைகள் ஈடுபட்டு வருகின்றன.

காஸா கூடாரம்

மறுபுறம், போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காஸாவுக்கு திரும்பும் மக்களுக்காக தற்காலிகக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் இடிந்து சேதமடைந்த கட்டடங்களுக்கு மத்தியில் உள்ள காலி இடத்தில் 100க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போரின்போது, காஸாவை விட்டு வெளியேறிய மக்கள், வரும் நாட்களில் ஊர் திரும்புவார்கள் என்பதால், அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நோக்கத்தில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.