போர் நிறுத்த ஒப்பந்தம் என்ன ஆச்சு? | பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்!
இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னை என்பது இன்று நேற்றல்ல.. பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இதற்கிடையே, காஸாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து ஹமாஸ் படையினர் தங்கள் வசம் இருந்த 3 பணயக் கைதிகளை விடுவித்தனர். பதிலுக்கு இஸ்ரேலும் 90 பாலஸ்தீனர்களை விடுவித்தது. அடுத்தகட்டமாக ஹமாஸ் அமைப்பு வரும் ஜனவரி 25ஆம் தேதி, தங்கள் பிடியில் உள்ள 4 பணயக் கைதிகளை விடுவிக்க உள்ளது.
இந்த நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் குறைந்தது இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 25 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. என்றாலும், கொல்லப்பட்டவர்களின் அடையாளம் உடனடியாகத் தெரியவில்லை.
ஆக்கிரமிக்கப்பட்ட இந்த மேற்குக் கரையில் முந்தைய ஜோ பைடன் அரசால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நீக்கியிருந்தார். இதை, அப்பகுதியில் குடியேறியவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இது சட்டவிரோத குடியேற்றங்களுக்கு மிகவும் சாதகமான அணுகுமுறையை எடுக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அந்த வகையிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.