பாலேந்திர ஷா எக்ஸ் தளம்
உலகம்

நேபாளம் | பிரதமராகும் ராப் பாடகர்.. பாலேந்திர ஷா யார்? இந்தியாவுக்கு எதிரானவரா?

நேபாளத் தேர்தலில் பாலேன் ஷாவின் ராஷ்ட்ரிய சுதந்திரா கட்சி அதிக பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது.

Prakash J

நேபாளத்தில் ராப் பாடகர் பாலேன் ஷாவின் ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி இப்போது 107 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், பிரதமர் கே.பி.ஒலியின் கட்சி உட்பட பிற கட்சிகள் 11 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. இதன்மூலம், நேபாளத் தேர்தலில் பாலேன் ஷாவின் ராஷ்ட்ரிய சுதந்திரா கட்சி அதிக பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. பாலேந்திர ஷா விரைவில் பிரதமராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.

2025 செப்டம்பரில் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்ததாலும், அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக எழுந்த புகாராலும் அதிருப்தியடைந்த இளைஞர்கள் வீதிகளில் போராடினர். இதன் விளைவாக பிரதமர் சர்மா ஒலி பதவி விலகி இடைக்காலப் பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுஷிலா கார்க்கி பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து மார்ச் 5ஆம் தேதி நேபாளத்திற்குப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 275 இடங்களைக் கொண்ட நேபாளத்தில், 165 இடங்களுக்கு நேரடித் தேர்தல் மூலமாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில், இத்தேர்தலில் காத்மாண்டு முன்னாள் மேயரும் ராப் பாடகருமான பாலன் ஷாவை (பாலேந்திர ஷா) ராஷ்ட்ரிய சுதந்தந்திர பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது.

nepal election

மறுபுறம், ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனின்ஸ்ட் கட்சியின் பிரதமர் வேட்பாளராக கே.பி.சர்மா ஒலியே நிறுத்தப்பட்டார். நேற்று நடைபெற்ற தேர்தலில் 60 சதவிகித வாக்குகள் பதிவாகிய நிலையில், அவை இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது வரை பாலேன் ஷாவின் ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சி இப்போது 107 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், பிரதமர் கே.பி.ஒலியின் கட்சி உட்பட பிற கட்சிகள் 11 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன. இதன்மூலம், நேபாளத் தேர்தலில் பாலேன் ஷாவின் ராஷ்ட்ரிய சுதந்திரா கட்சி அதிக பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. பாலேந்திர ஷா விரைவில் பிரதமராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.

பாலேந்திர ஷா

யார் இந்த பாலேந்திர ஷா?

ராப் பாடகரான பாலேந்திர ஷா, 2022ஆம் ஆண்டு காத்மாண்டு தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு மேயரானார். தற்போது நேபாள அரசியல் முகமாக அறியப்படும் அவர், இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மேயர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி, பாரம்பரிய ஆட்சிக்கு முடிவு உள்ளிட்டவற்றின் வாக்குறுதிகளின் மூலம் அவர் இளைஞர்களின் ஆதரவைப் பெற்றதுடன் தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

இதற்கிடையே இந்தியா - நேபாளம் உறவு எப்படி உள்ளது என்பது குறித்து இங்கு பார்ப்போம். நேபாள எல்லையில் லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் காலாபானி ஆகிய பகுதிகள் இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சைக்குரிய பிரச்னையாக இருந்து வருகின்றன. இப்பகுதிகள் உத்தரகாண்டு மாநிலத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தப் பகுதிகளை மையப்படுத்தி நேபாள அரசு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம்,அதன் வரைபடத்தின் ஒரு பகுதியாகக் காட்டும் புதிய NPR 100 ரூபாய் நோட்டை வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

பாலேந்திர ஷா

மறுபுறம், நேபாளத்தின் இடதுசாரி தலைவர்கள் பலர், இந்தியா உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் உள்நாட்டு அரசியல், தீர்க்கப்படாத பிராந்திய மோதல்கள் ஆகியவற்றால் இந்தியா - நேபாள உறவுகள் கடந்தகாலங்களில் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளன. இது, புதிய அரசில் எப்படி இருக்கப்போகிறது என்பதும் ஒரு நிச்சயமற்றதாகவே உள்ளது. அதற்குக் காரணம், பாலேன் ஷா, அவரது ஆதரவாளர்களிடையே இந்தியாவுக்கு எதிரானவராகவே கருதப்படுகிறார். எனினும் காத்மாண்டுவில் ஒரு நிலையான அரசாங்கம் அமைந்த பிறகே, இரு நாட்டு உறவுகள் மீட்டெடுக்கப்படுமா என்பது தெரிய வரும்.