இலங்கை தற்போது LGBTQ நாடாக மாறி வருவதாக நாடாளுமன்ற விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில், நேற்று (செப்டம்பர் 26) நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, ”இலங்கை நாடு தற்போது அமைப்பு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், தமிழர்கள் என அழகாக வாழ்ந்து வந்த இந்த நாடு தற்போது LGBTQ நாடாக மாறிவருகிறது.இந்தியப் பெருங்கடலின் முத்து என அழைக்கப்படும் நம் இலங்கைக்கு உலக நாடுகளில் ஒரு கண்ணியம் உள்ளது.
ஆனால், இன்று LGBTQ-க்கு அழகான நாடு என சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வாறு நடக்குமானால் எதிர்காலத்தில் நாடாளுமன்றில் முன்னாள் உள்ள இருக்கைகளில் அமர்ந்து கொண்டு நமது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் Lgptq-க்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள்” எனத் தெரிவித்தார். இந்நிலையில், Lgptq விற்கு எதிராக பேசிய இராமநாதன் அர்ச்சுனாவின் இந்தக்கருத்து இலங்கையில் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.
சமீபத்தில், இலங்கையில் Lgptq சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், நாட்டை ஒரு பாதுகாப்பான மற்றும் அனைவரையும் வரவேற்கும் இடமாக மாற்றுவதற்கும், ஈக்குவல் கிரௌண்ட் என்ற அமைப்புடன் இணைந்து ஒரு திட்டத்தை இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்தச் சூழலிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.