model image meta ai
உலகம்

அயர்லாந்து | "இந்தியாவுக்குத் திரும்பிச் செல்" இனவெறித் தாக்குதலுக்கு ஆளான 6 வயது இந்தியச் சிறுமி!

அயர்லாந்து நாட்டில் ஆறு வயது இந்திய வம்சாவளி சிறுமி மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

அச்சுதன் என்ற செவிலியர், தனது கணவருடன் எட்டு வருடங்களாக அயர்லாந்தின் வாட்டர்ஃபோர்டில் வசித்து வருகிறார். சமீபத்தில் ஐரிஷ் குடியுரிமையும் பெற்றுள்ளார். அவரது குழந்தைகள் அந்த நாட்டில் பிறந்தனர். இந்த நிலையில்தான் அவருடைய 6 வயதுக் குழந்தை தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது இனவெறி ரீதியாகத் தாக்கியுள்ளனர். 8 வயது சிறுமி மற்றும் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சில சிறுவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்.

"இந்தியாவுக்குத் திரும்பிச் செல்", "அழுக்கு இந்தியர்" போன்ற இனவெறி வாசகங்களைக் கூறிய அவர்கள், சிறுமியை தாக்கவும் செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய சிறுவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டாம் என்றும் உளவியல் ஆலோசனையும் வழிகாட்டலுமே அளிக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கூறியுள்ளார்.

model image

என் மகள் வீட்டுக்குள் வெளியே அங்கிருந்த நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அதற்கு எனது மகன் பசியால் அழவே, அவனுக்கு உணவு கொடுப்பதற்காக நான் வீட்டுக்கு வந்தேன். அந்தச் சமயத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவளால் பேசக்கூட முடியவில்லை. அவள் மிகவும் பயந்துபோயிருந்தாள். என் மகளை நான் அப்படி ஒருபோதும் பார்த்ததில்லை. நான் அவளுடைய தோழிகளிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். அவர்கள், அனைவரும் மிகவும் வருத்தப்பட்டனர். அவர்களால் பேச முடியவில்லை.

அவளுடைய தோழிகளில் ஒருவர், ’அவர்களைவிட வயதான பையன்கள் ஒரு கும்பல் சைக்கிளால் அவளை அந்தரங்க பாகங்களில் அடித்ததாகவும், அவர்களில் ஐந்து பேர் அவள் முகத்தில் குத்தியதாகவும் கூறினாள்.

நான் ஒரு செவிலியர், மக்களை கவனித்துக்கொள்ள என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். நான் என் வேலையைச் செய்கிறேன், நான் 100 சதவீதம் தொழில்முறை. நான் என் குடியுரிமையை மாற்றினேன். ஆனால் இன்னும் நாங்கள் ’அழுக்கு மக்கள்’ என்று அழைக்கப்படுகிறோம். என் குழந்தைகள்கூட பாதுகாப்பாக இல்லை.

அரசாங்கம் இதை எவ்வாறு நிவர்த்தி செய்யும் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு தொழிலாளர் இடைவெளியை நிரப்ப நாங்கள் இங்கு வந்தோம். நாங்கள் தொழில் வல்லுநர்கள் - எங்களிடம் அனைத்து சான்றிதழ்களும் உள்ளன... இது என்னுடைய நாடு என்றும் நான் நம்புகிறேன். நான் இங்கேதான் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்தில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 40 வயது இந்தியரின் ஆடைகளைக் களைந்து பதின்பருவச் சிறார் சிலர் இனவெறித் தாக்குதல் நடத்தினர். தலைநகர் டப்ளினில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் இந்திய வம்சாவளியினர் மீதான மூன்று தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், அயர்லாந்தில் இந்திய வம்சாவளி குழந்தை மீது நடத்தப்பட்ட முதல் ஆவணப்படுத்தப்பட்ட இனவெறித் தாக்குதல் இதுவாகும் என்று நம்பப்படுகிறது.

model image

சில நாட்களுக்கு முன்பு, அதே குழந்தை மற்றொரு குழந்தைகள் குழுவால் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இனரீதியாக தூண்டப்பட்ட சம்பவமாகவும் தெரிகிறது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, அயர்லாந்தில் உள்ள இந்திய குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய தூதரகம் ஓர் ஆலோசனையை வெளியிட்டுள்ளது.