செய்தியாளர்: எம்.மீரா
ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து வடக்கு அயர்லாந்து பிரிந்து, அயர்லாந்து குடியரசுடன் இணைவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது பிரிட்டன் அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இதன் பின்னணியில் இங்கிலாந்து, பிரிட்டன், ஐக்கிய ராஜ்ஜியம் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். இங்கிலாந்து என்பது கிரேட் பிரிட்டன், ஐக்கிய ராஜ்ஜியம் ஆகியவற்றின் பகுதியாக உள்ள நாடு. பிரிட்டன் என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது.
ஐக்கிய ராஜ்ஜியம் அதாவது யூ.கே. என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. ஐக்கிய ராஜ்ஜியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இங்கிலாந்தின் பங்கு 86.4 ஆகும். ஸ்காட்லாந்தின் பங்கு 7.6. வேல்ஸின் பங்கு 3.3. வடக்கு அயர்லாந்தின் பங்கு 2.7 ஆகும். ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து அயர்லாந்து நாடு போர், ஒப்பந்தம், நாடாளுமன்றச் சட்டம் ஆகிய தொடர் வழிமுறைகளில் 1949இல் பிரிந்து சென்றது.
ஐக்கிய ராஜ்ஜியத்தைப் பொறுத்தவரை அதன் பங்காக உள்ள நாடுகள் பிரிந்துபோவதா, வேண்டாமா என்பதற்குக் கருத்தெடுப்பு நடத்தப்படுகிறது. இதிலிருந்து அந்த நாடு கூட்டாட்சிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். ஐக்கிய ராஜ்ஜியத்துடன் இருப்பதா, பிரிவதா என்ற விஷயத்தில் முடிவெடுக்க 1973இல் வடக்கு அயர்லாந்திலும் 2014இல் ஸ்காட்லாந்திலும் கருத்தெடுப்புகள் நடைபெற்றன. இரண்டு கருத்தெடுப்பிலும் மக்கள் ஐக்கிய ராஜ்ஜியத்துடனே இருக்கலாம் என்பதற்கே பெரும்பான்மையாக வாக்களித்தார்கள்.
தற்போது ட்ரம்ப் கிளப்பிய புயலால் பிரிவினைப் பேச்சு ஐக்கிய ராஜ்ஜியத்தின் மையப் பொருளாகியிருக்கிறது. பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) வடக்கு அயர்லாந்தில் பிரிவினைக்கான கருத்தெடுப்பு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவற்றின் தலைவர்கள் கார்டிஃப் (Cardiff) நகரில் அவசர மாநாடு நடத்த உள்ளனர். ஐக்கிய ராஜ்ஜியத்தைப் பிரிப்பதற்கான திட்டங்கள் மற்றும் சுயநிர்ணய உரிமை குறித்த ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திட உள்ளனர். வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்றத்தால் தங்களது தேவைகள் ஒருபோதும் பூர்த்தியாகாது என்றும், அரசமைப்பு மாற்றங்களுக்கு ஐக்கிய ராஜ்ஜிய அரசு தயாராக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.