pakistan, life span pt web
உலகம்

PT World Digest | பாகிஸ்தானில் நடந்த தற்கொலை தாக்குதல் முதல் ஆயுளை 150 வயதாக நீட்டிக்கும் ஆய்வு வரை

இன்றைய PT World Digest பகுதியில் பாகிஸ்தானில் நடந்த தற்கொலை தாக்குதல் முதல் சீனாவின் மனித ஆயுளை 150 வயதாக நீட்டிக்கும் ஆய்வு வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.

PT WEB

துருக்கி சரக்கு விமானம் விபத்து

விபத்துக்குள்ளான துருக்கி ராணுவத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம்

துருக்கி ராணுவத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஜார்ஜியா - அஜர்பைஜான் எல்லையில் விபத்துக்குள்ளானது. அஜர்பைஜானில் இருந்து துருக்கி புறப்பட்டுச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது. விபத்துக்குள்ளான சரக்கு விமானத்தில் 20 பேர் பயணித்ததாக தெரிகிறது. எனினும் இந்த விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

நிவாரணப் பொருட்களுடன் சென்ற விமானம் விபத்து

விபத்துக்குள்ளான

அமெரிக்காவில் புயல் நிவாரணப் பொருட்கள் ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். புளோரிடா மாகாணத்தின், ஃபோர்ட் லாடர்டேலில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் மியாமிக்கு வடக்கே உள்ள கோரல் ஸ்பிரிங்ஸ் நகரின் குடியிருப்புப் பகுதியில் ஒரு ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த தந்தை மற்றும் மகள் உயிரிழந்தனர். இருவரும், சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஜமைக்கா மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இடிந்தது ஹாங்கி பாலம்

hongqi bridge

சீனாவின் ஹாங்கி பாலம் பகுதி இடிந்ததற்கு அணையில் அதிக அளவு நீர் தேர்க்கப்பட்டதே காரணம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிச்சுவான் மாகாணத்தில் சுவாங்ஜியாங்கௌ பகுதியில் உள்ள ஹாங்கி பாலம் பகுதியளவு இடிந்து விழுந்தது. அருகே உள்ள ஒரு நீர்த்தேக்கத்தில் அதிக நீர் சேமித்து வைக்கப்பட்டதால் மலைப்பகுதியில் ஏற்பட்ட விரிசல்களால் பாலம் இடிந்திருக்கலாம் என தெரிகிறது. மலைச் சரிவில் உறுதியின்மை காரணமாகவே பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சேதம் குறித்த விவரம் தெரியவரவில்லை.

பிலிப்பைன்ஸ் புயல்: 250 பேர் உயிரிழப்பு 

storms in Philippines

பிலிப்பைன்ஸை அடுத்தடுத்து தாக்கிய புயல்களால், இதுவரை சுமார் 250 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி புயலால், பல இடங்கள் வெள்ளக்காடாகின. இதனால் 232 பேர் உயிரிழந்தனர். இந்த பெரும் துயரத்தில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன், ஃபங்வாங் புயல் தாக்கியதில், மேலும் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இரண்டு புயல்களால் பிலிப்பைன்ஸில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ரஷ்ய ஏ.ஐ ரோபோ அறிமுகத்தில் சறுக்கல்

ரஷ்யாவின் முதல் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மனித உருவ ரோபோவான 'ஏஐடோல்' (AIdol), மாஸ்கோவில் நடந்த அதிகாரப்பூர்வ அறிமுகத்தின்போது மேடையில் சமநிலை தவறி விழுந்தது. ரோபோவை இரண்டு ஊழியர்கள் இசைக்கு ஏற்றவாறு மேடைக்கு அழைத்து வந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. உலக அரங்கில் கால் பதிக்கவிருந்த AIdol, மேடையில் சில அடிகள் வைத்தவுடனேயே சமநிலை தவறி, தடாலெனக் கீழே விழுந்தது. இதனையடுத்து ஊழியர்கள் கருப்புத்துணியால் மேடையை மறைத்தவாறு அவசர அவசரமாக மறைவான பகுதிக்கு அந்த ரோபோவை இழுத்துச் சென்றனர். சமநிலைப்படுத்தும் சிக்கல் காரணமாக இந்த தவறு நேரிட்டதாக வடிவமைப்பாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், ரோபோ தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, விளாடிமிர் விதுகின், இந்த அனுபவம் தங்கள் திறனை மேம்படுத்த உதவும் என நேர்மறையாக தெரிவித்தார். மேலும், இந்த ரோபோ 77% ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பாகங்களைக் கொண்டுள்ளது என்றும், மனிதனைப் போலவே சிரிக்கவும், யோசிக்கவும், ஆச்சரியப்படவும் முடியும் என்றும் விளாடிமிர் குறிப்பிட்டார்.

ஹெச்1பி விசா வைத்திருப்போருக்கு  ட்ரம்ப் ஆதரவு

trump

அமெரிக்காவில் போதுமான அளவு திறமைவாய்ந்த பணியாளர்கள் இல்லை என்பதால் ஹெச்1பி விசா மூலம் வெளிநாட்டிலிருந்து திறமைசாலிகளை அழைத்துவருவது அவசியமானது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் சென்று வாழ்வதற்கான கட்டுப்பாடுகளை அதிகரித்துவரும் ட்ரம்ப் ஒரு காணொளிப் பேட்டியில் இவ்வாறு கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. ஹெச்1பி விசாவுடன் அமெரிக்காவில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியர்களே மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் பலி

Islamabad

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் ஒரு நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்துக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு நிகழ்ந்த நிலையில், பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானுக்கும் ஆப்கனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த சில தினங்களுக்குள் இந்தத் தாக்குதல் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் : இந்தியாவின் சதி

ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இந்தியாவின் சதி இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பாகிஸ்தானை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்படுவதாகவும் அவர் சாடியுள்ளார். ஆனால், பாகிஸ்தான் தலைமை கூறி வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. பாகிஸ்தானுக்குள் நடந்துகொண்டிருக்கும் அரசியலமைப்புச் சீர்குலைவு மற்றும் அதிகார அபகரிப்பில் இருந்து, சொந்த மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக, இந்தியாவுக்கு எதிராகத் தவறான கதைகளை உருவாக்குவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மனித ஆயுளை 150 வயதாக நீட்டிக்கும் ஆய்வு

சீனாவைச் சேர்ந்த 'லான்வி பயோசயின்சஸ்' என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம், 150 ஆண்டுகள் வரை மனிதர்களின் ஆயுளை நீட்டிக்கக்கூடிய 'ஆன்டி-ஏஜிங்' மாத்திரைகளை உருவாக்கி வருகிறது. இந்த மாத்திரைகள், உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களுக்குத் தீங்கு விளைவிக்கும் "ஸோம்பி செல்கள்" எனப்படும் முதிய செல்களை குறிவைத்துத் தாக்கும். திராட்சை விதைச் சாற்றில் இருந்து பெறப்பட்ட புரோசியானிடின் சி1 சேர்மத்தைக்கொண்டு இது தயாரிக்கப்படுகிறது. ஆய்வகப் பரிசோதனையில் இந்த மாத்திரைகள் எலிகளின் ஆயுட்காலத்தை நீடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய - ரஷ்ய ஆய்வாளர்  நெகிழ்ச்சி 

Elizabeth Tsurkov

ஈராக்கில் கொடூரமான சித்திரவதையை அனுபவித்து இரண்டரை ஆண்டுகளுக்கு பின் விடுதலையான இஸ்ரேலிய - ரஷ்ய ஆய்வாளர், நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளார். ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயிலும் 38 வயதான இஸ்ரேலிய-ரஷ்ய மாணவி எலிசபெத் கர்கோவ், கடந்த 2023ஆம் ஆண்டு ஈராக்கில் ஒரு பயங்கரவாத குழுவினரால் கடத்தப்பட்டார். சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலையான அவர், மிக கொடூரமான சித்திரவதைகளுக்குப் பின்னர், தான் உயிர் பிழைத்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.