
டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே மாலை 6.52 மணியளவில் HR26 CE 7674 என்ற பதிவு எண் கொண்ட ஒரு வெள்ளை ஹூண்டாய் i20 கார் வெடித்து சிதறியது. மெதுவாக வந்த கார் ரெட் சிக்னலில் நின்ற பிறகு வெடித்துச் சிதறியது. அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறியடித்து தப்பியோடினர். வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தைச் சுற்றி இருந்த சில வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 13 நபர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் முக்கியத் தகவல்கள் கீழே..
டெல்லி கார் வெடிப்பு வழக்கில் தேசியப் புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. டெல்லி செங்கோட்டை அருகே திங்கட்கிழமை நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கார் வெடிப்பு தொடர்பாக டெல்லியில் பல இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வுசெய்யப்பட்டு வருகின்றன. கார் வெடிப்பு பயங்கரவாதத் தாக்குதலாக இருக்குமோ என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே, என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்திருந்த நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
டெல்லியில் வெடித்த காரின் 11 மணிநேர பயண விவரங்களை காவல் துறை முழுமையாக சேகரித்து வருகிறது. ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் திங்கள் கிழமை காலை 7.30 மணியளவில் அந்த கார் முதன் முதலில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பிறகு காலை 8.13 மணிக்கு டெல்லிக்குள் நுழையும் சுங்கச்சாவடியை அந்தக் கார் கடந்துள்ளது. பின்னர் பெட்ரோல் பங்க் ஒன்றில் நின்ற போது அங்கிருந்த கேமராவிலும் அந்த கார் பதிவாகியுள்ளது. சரியாக பிற்பகல் 3.19 மணிக்கு அந்த கார் செங்கோட்டை அருகே வந்து சுமார் 3 மணி நேரம் அப்படியே நின்று விட்டது. பிறகு 6.22க்கு அந்த கார் புறப்படுகிறது. 6.52க்கு கார் வெடித்துச் சிதறியுள்ளது. இந்த 30 நிமிட நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து காவல் துறையினர் விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர்
டெல்லியில் வெடிப்புக்கு உள்ளான காருக்கு, பெட்ரோல் பங்கில் மாசு சோதனை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. டெல்லி செங்கோட்டை அருகே வெடித்த வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 காருக்கு, கடந்த அக்டோபர் 29ஆம் தேதியன்று ஓக்லா பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மாசு சோதனை செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய புதிய சிசிடிவி வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில், தாடி வைத்திருக்கும் 3 ஆண்கள் அந்தக் காருக்கு அருகில் நின்றிருந்தது பதிவாகி உள்ளது. அவர்களில் ஒருவர் தாரிக் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த சிசிடிவி காட்சிகள் கார் வெடிப்பு வழக்கில் முக்கியத் திருப்பமாக கருதப்படுகிறது.
கார் வெடிப்பு சம்பவத்தின் மூளையாக இருந்து திட்டத்தை நிறைவேற்றியவர் மருத்துவர் முகமது உமர் என தெரியவந்துள்ளது. வெள்ளை நிற காரை இவர் ஓட்டி வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. மாலை 6.52க்கு அசம்பாவிதம் நடைபெற்ற நிலையில் பிற்பகல் 3.19 மணியளவிலேயே அப்பகுதியில் உள்ள சுனேரி மஸ்ஜித் அருகே வந்து முகமது உமர் காத்திருந்துள்ளார். மதியம் 6.48 மணிக்கு கார் புறப்பட்டு மெதுவாக செல்லும் காட்சிகளும் சுங்கச்சாவடி ஒன்றில் பணம் செலுத்தி ரசீது பெறும்காட்சிகளும் பதிவாகியுள்ளன. கார் ஓட்டுரான முகமது உமர் கறுப்பு நிறமுகக்கவசம் அணிந்துள்ளதும் சிசிடிவி காட்சியில் தெரியவந்துள்ளது. இதன்பின்னர் அந்த கார் மெதுவாக நகர்ந்து சிக்னலில் நிற்கும்போது 6.52 மணிக்கு வெடித்துச் சிதறியுள்ளது. பக்கத்தில் உள்ள வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததுடன் (9 பேர் உயிரிழந்துள்னர்) காருக்குள் இருந்த முகமது உமர் இறந்திருக்கக்கூடும் எனக்கூறப்படுகிறது. காருக்குள் மேலும் இருவர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு, தற்கொலை தீவிரவாத தாக்குதல் அல்ல என புலனாய்வு அமைப்புகள் கூறி உள்ளன. கார்வெடிப்பு குறித்த விசாரணையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. அதன்படி வழக்கமாக மேற்கொள்ளப்படும் தற்கொலை தீவிரவாத தாக்குதல் அல்ல என்பது தெரியவந்துள்ளது. தற்கொலை தீவிரவாதி குண்டுகளுடன் கூடிய காரைஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிமோதவோ அல்லது தாக்கவோ செய்யவில்லை. அதே நேரத்தில் சந்தேகத்துக்குரிய நபர், பீதியில் வெடிகுண்டை வெடிக்க வைத்திருக்கலாம் என்றும் புலனாய்வு அமைப்பினர் கருதுகின்றனர்.
டெல்லி கார் வெடிப்பு நிகழ்வைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய இன்று உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதே போன்று, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற உள்ளது. இதில் டெல்லி நிகழ்வுக்கான பின்னணி குறித்து பேசுவதுடன் பயங்கரவாத தாக்குதல்களை தடுப்பது குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கிடையே ஃபரீதாபாத், லக்னோ ஆகிய ஊர்களில் பயங்கரவாத தொடர்பில் உள்ளோரின் இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என, உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், கார் வெடிப்பு குற்றவாளிகள் மிக மோசமான பின்விளைவுகளை சந்திப்பார்கள் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சர்பதவியில் இருக்க தகுதியற்றவர் என கர்நாடக அமைச்சரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே விமர்சித்துள்ளார். உளவுத்துறையின் தோல்வியே டெல்லி கார் வெடிப்புக்கு காரணம் என்றும் இதற்கு பொறுப்பேற்று அமித் ஷா ராஜினாமா செய்யவேண்டும் என்றும் பிரியங்க் கார்கே வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் இது வரை இருந்த உள்துறை அமைச்சர்களிலேயே அமித்ஷா தான் திறமையற்றவர் என்றும் கார்கே விமர்சித்துள்ளார். இவரது நிர்வாகத்தில் ஏராளமான அப்பாவி உயிர்கள் பலியானதாகவும் பிரியங்க் கார்கே சாடியுள்ளார். அமித் ஷா மீதுநடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி தயங்குவது ஏன் என்றும் பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்