பிரதமர் மோடி அனைத்து நாடுகளுடனும் நட்புறவு கொண்டிருக்கும் நிலையில், அதை மேலும் வளர்க்கும் வகையில் அந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் தென் அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கானாவில் நாளை தொடங்கும் அவரது சுற்றுப்பயணம், அடுத்து கரீபியன் நாடான டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கும், பின்னர் அர்ஜென்டினாவிற்கும் செல்ல இருக்கிறார். அங்கிருந்து 17வது பிரிக்ஸ் 2025 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரேசிலுக்குச் செல்ல இருக்கிறார். பின்னர் நான்கு நாடுகளின் இறுதிக்கட்டத்திற்காக நமீபியாவுக்குச் செல்கிறார்.
இதில் அவர், கானாவிற்குச் செல்வது30 ஆண்டுகளில் ஓர் இந்திய பிரதமரின் முதல் பயணமாகும். இந்தப் பயணத்தின்போது, பிரதமர் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திலும் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் அர்ஜெண்டினா பயணத்தின்போது, இரு தலைவர்களும் இருதரப்பு பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் தற்போதைய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை மேற்கொள்வார்கள் என நம்பப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், பிரதமர் மோடி சமீபத்திய பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றை மேற்கோள் காட்டி பயங்கரவாதம் தொடர்பான கவலைகளைப் பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக, அவருடைய பயணம் நமீபியாவில் நிறைவடைய இருக்கிறது. இது 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் இந்தியப் பிரதமரின் முதல் பயணமாகும். இந்த விஜயத்தின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்று, நமீபியாவில் இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (UPI) செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஆகும். பூட்டான், மொரீஷியஸ், நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏற்கனவே செயலில் உள்ள இந்தியாவின் டிஜிட்டல் கட்டண முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.