தாய்லாந்தில் நடைபெறும் வங்கக் கடலோர நாடுகளின் அமைப்பான BIMSTEC நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடியும் முகமது யூனுசும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதிப்படுத்த முகமது யூனுசை பிரதமர் மோடி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. வங்கதேசத்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை தொடர்ந்து, பதவி விலகி நாட்டைவிட்டு தப்பிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா தஞ்சமளித்துள்ளது.
மறுமுனையில் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கிறது. சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் வங்கதேசம் மிகவும் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது. அண்மையில் சீனா சென்ற முகமது யூனுஸ் தங்கள் நாட்டில் வர்த்தகத்தை விரிவாக்கலாம் என்று பேசியதோடு, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக்கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில் மோடி, முகமது யூனுஸ் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. இப்பயணத்தின்போது மியான்மர் ராணுவ அரசின் தலைவர், ஜெனரல் மின் ஆங் ஹிலாங்-ஐயும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. இவ்வரசு ஷேக் ஹசீனாவிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ஹசீனாவை நாடு கடத்தும்படி வங்கதேசம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதற்கு செவிசாய்க்காத இந்தியா, அவரது விசாவை நீட்டித்துள்ளது. தவிர, வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. இதில் தலையீடு கூடாது என வங்கதேசம் பதில் அளித்திருந்தது. இதனால் இருதரப்பு உறவில் விரிசல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.