வங்கதேசம் | ஷகீப் அல் ஹாசனின் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது.
இந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகீப் அல் ஹாசனின் சொத்துகளை பறிமுதல் செய்ய டாக்கா நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஷகீப் அல் ஹாசன், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்தவர்.
கடந்த ஆண்டு ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது கொடூரமான அடக்குமுறை கொலை விசாரணைகளை எதிர்கொள்ளும் நபர்களில் ஷகீப்பும் ஒருவர். அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது இன்னும் குற்றம்சாட்டப்படவில்லை. ஆனால், தற்போது டாலர் 300,000க்கும் அதிகமான மதிப்புள்ள காசோலைகள் திரும்பிச் சென்றதாகக் கூறப்படும் மோசடி குற்றச்சாட்டுகளின்கீழ் அவர்மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, அதற்கு ஈடாக ஷகீப் அல் ஹாசனின் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.