அர்ஜென்டினா மற்றும் சிலியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சிலி மற்றும் அர்ஜென்டினாவின் தெற்கே 222 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரை பகுதிகளில் 7.4 ரிக்டர் அளவில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
மே 2 ஆம் தேதி மாலை சுமார் 6.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் கேப் ஹார்ன் மற்றும் அண்டார்டிகாவிற்கு இடையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் சிலியின் தெற்கு முனையில் உள்ள மாகல்லன்ஸ் பகுதியின் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கொத்து கொத்தாக பாதுகாப்பான இடத்தை நோக்கி வெளியேறி வருகின்றனர்.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்புப் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.