கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுருவாக இருந்த போப் பிரான்சிஸ் (88), காலமானதைத் தொடர்ந்து, அடுத்த தலைவர் பற்றிய நடைமுறைகள் வேகம்பிடித்து வருகின்றன. அந்த வகையில், வரும் 7ஆம் தேதி புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கார்டினல்கள் மாநாடு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், மறைந்த போப் பிரான்சிஸின் விருப்பப்படி அவரது வாகனங்களில் ஒன்று, காஸா குழந்தைகளுக்கான நடமாடும் மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது. போப் பிரான்சிஸ் தனது இறுதி ஆசைகளில் ஒன்றாக, தான் 2014ஆம் ஆண்டு புனித பயணம் மேற்கொண்ட வாகனத்தை, போரினால் பாதிக்கப்பட்டு வரும் காஸாவிலுள்ள குழந்தைகளுக்கு உதவ பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். குறிப்பாக காயமடைந்த மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டு குழந்தைகளுக்காக, அதனை பயன்படுத்துமாறு தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அந்த வாகனத்தை நடமாடும் மருத்துவமனையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்ததும் அந்த வாகனம் காஸாவிற்கு அனுப்பப்படவுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. எனினும் இரண்டாம்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படாததால், அங்கு தற்போது மீண்டும் போர் நடைபெற்று வருகிறது. இதில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது .