Hormuz Reuters
உலகம்

"நாங்க தவிக்கிறோம்... ஹார்முஸை திறந்துவிடுங்கள்!” ஈரானிடம் கெஞ்சும் அமெரிக்காவின் நட்பு நாடு

கடல் வர்த்தக பாதிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு: ஹார்முஸ் பிரச்சினைக்கு தீர்வு தேடும் உலகம்

PT WEB

செய்தியாளர் - M.மீரா

ஹார்முஸ் நீரிணை நெருக்கடியால் உலகப் பொருளாதாரம் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20% ஹார்முஸ் வழியாக நடப்பதால், இதன் முடக்கம் சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலையை வரலாறு காணாத அளவில் உயர்த்தியுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பால் கப்பல் போக்குவரத்துச் செலவுகள் (Freight rates) உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உலகளவில் அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் (Inflation) மீண்டும் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுள்ளது. மேலும் ஆசிய-ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான கடல்வழி வர்த்தகம் தடைபட்டு, உற்பத்தித் துறை முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

hormuz

இந்நிலையில் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறக்குமாறும், கடற்படைத் தாக்குதல்களை நிறுத்துமாறும் அமெரிக்காவின் முக்கிய நேட்டோ (NATO) நட்பு நாடான துருக்கி, ஈரானிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்தான்புல்லில் நடந்த சர்வதேசப் பாதுகாப்பு மாநாட்டில் துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான் (Hakan Fidan) இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரானின் புரட்சிகரக் காவல் படை (IRGC) ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் மற்றும் கடல் கண்ணிவெடி அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

hormuz

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவத் தலையீடுகள் எதற்கும் தீர்வாகாது என்றும், அது போரை மேலும் விரிவுபடுத்தும் என்றும் துருக்கி எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு மேலும் ஒரு பேரழிவைச் சந்திக்காமல் இருக்க, ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தூதரகப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் எனத் துருக்கி வலியுறுத்தியுள்ளது.

துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்கினால் மட்டுமே, 6 நாட்களுக்குள் ஹார்முஸ் நீரிணையைத் திறக்க முடியும் என ஈரான் பிடிவாதமாக உள்ளது.