தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 181 பயணிகளுடன் வந்த ஜேஜு ஏர் (Jeju Air) நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 ரக விமானம், தென் கொரியாவின் முவானில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, ஓடுதளத்தில் தரையிறங்கியபோது, விமானத்தின் முன்சக்கரம் செயலிழந்ததால், ஓடுபாதையை தாண்டி கான்க்ரீட் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து, விமானத்தில் தீப்பிடித்ததால், அதிலிருந்த பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இதற்கிடையே, 32 தீயணைப்பு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் மூலம் தீயணைப்புப் படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த பணியில் தீயணைப்புப் படையினர், காவல் துறையினர், ராணுவத்தினர் என ஆயிரத்து 560க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், விமானம் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
சக்கரப் பகுதியில் பறவைகள் சிக்கி இருக்கக்கூடும் என்றும், அதன் காரணமாக முன்சக்கரம் செயலிழந்திருந்தக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பறவை சிக்கிக்கொள்வதற்கான வாய்ப்பு குறித்தும், அதை கருத்தில்கொண்டு வேறு இடத்தில் விமானத்தை தரையிறக்கவும், விமானியிடம் விமான கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்ததாக விமான போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜேஜு ஏர் நிறுவனத்தின் தலைவர் கிம் இ பே (Kim E-bae), இந்த விபத்துக்கு முழு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளார். விமானத்தை இயக்குவதற்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் எந்த தொழில்நுட்ப கோளாறும் இல்லை எனக்கூறிய அவர், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவந்ததும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறினார்.