சென்னை | கடன் கொடுத்ததை வைத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை.. நாதக நிர்வாகி கைது
அவசர தேவைக்கு பணம் கொடுத்து உதவுவது போல் நடித்து, அதை வைத்து மிரட்டி இளம்பெண்ணிற்கு தொல்லை அளித்ததாக புகாரளிக்கப்பட்ட நிலையில், நாதக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாதக நிர்வாகி!
சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியை சேர்ந்தவர் சக்திவேல். நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளராக இருந்து வருகிறார். இவர் கிண்டி மடுவங்கரையில் சொந்தமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவரது நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக சென்னையை சேர்ந்த 25 வயது இளம்பெண் பணியாற்றி வருகிறார். அவர் தனது குடும்ப அவசர தேவைக்காக சக்திவேலிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணை சக்திவேல் தனியாக அழைத்ததாக கூறப்படுகிறது. அப்பெண் வர மறுக்கவே தான் கொடுத்த இரண்டு லட்சத்தை உடனே தர வேண்டும் எனக்கூறி மிரட்டி உள்ளார்.
புகாரின் பேரில் கைதுநடவடிக்கை..
இது தொடர்பாக இளம்பெண் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். புகாரின் பேரில் சக்திவேல் கைது செய்யப்பட்டு, நேற்று இரவு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த பெண்ணிடம் மட்டுமில்லாமல் சக்திவேல் தனது நிறுவனத்தில் பணியாற்றும் மேலும் சில பெண்களிடமும் தவறாக பேசியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் இரண்டு பெண்கள் புகார் அளித்ததாக கூறியிருக்கும் போலீஸார், சக்திவேலின் செல்போன் மற்றும் லேப்டாப்பை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் தைரியமாக புகார் கொடுக்கலாம் என அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல இவர் எத்தனை பெண்களிடம் கடன் கொடுத்துவிட்டு சரியான நேரத்தில் திருப்பி தராததால் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.