அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவி ஏற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப், பல்வேறு அதிரடி அறிவிப்புகளில் கையெழுத்திட்டு வருகிறார். அந்த வகையில், சீனாவின் ஆதிக்கம், அதிக கட்டணம் வசூல் போன்ற காரணங்களால், அதிபராக ட்ரம்ப் பதவியேற்றவுடனேயே பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்று அறிவித்தார்.
பனாமா கால்வாயின் இரண்டு துறைமுகங்கள் ஹாங்காங் நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. இதனால், பனாமா கால்வாய் மீதான சீனாவின் கட்டுப்பாடு அதிகரித்து வருகிறது என்பது ட்ரம்பின் குற்றச்சாட்டாக உள்ளது.
பனாமா கால்வாய் சீனாவுக்கானது அல்ல என்றும் தவறானவர்களின் கைக்குச் சென்றுவிட்டது என்றும் அவர் விமர்சித்திருந்தார். இதன் காரணமாகவே அதை மீட்போம் என ட்ரம்ப் தெரிவித்திருந்ந்தார். இதற்கு பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முனிலோவும் பதிலடி கொடுத்திருந்தார். எனினும், பனாமா கால்வாயை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டிய சூழலில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பனாமா சென்றார்.
அதிபர் ட்ரம்பின் நிலைப்பாட்டை பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முலினோவிடம் ரூபியோ எடுத்துரைத்தார். இதையடுத்து, சீனாவுடன் செய்துகொண்ட பெருவழிப்பாதை திட்ட ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கப்போவதில்லை என்று பனாமா அதிபர் முலினோ அறிவித்தார்.
இந்த நிலையில், பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க போர்க்கப்பல் மற்றும் அரசு கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, இதன்மூலம் பல மில்லியன் டாலர்கள் சேமிக்கப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது.
ஆனால், அமெரிக்க அரசின் அறிவிப்பை பனாமா கால்வாய் ஆணையம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக பனாமா கால்வாய் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செய்தி வெளியிடப்படுகிறது. கால்வாயின் சுங்கக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை நிர்ணயிக்க பனாமா கால்வாய் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. நாங்கள் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்க அரசு மற்றும் போர்க்கப்பல் போக்குவரத்து தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் உரையாட ஆணையம் தயாராக உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தது.
தற்போது அந்த அறிக்கை பொய் என பனாமா அதிபர் ஜோஸ் ரால் முலினோவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”அமெரிக்க கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துவதாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமெரிக்காவின் அறிக்கை முற்றிலும் பொய்” என தெரிவித்துள்ளார்.