panama canal x page
உலகம்

அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்தது பனாமா.. சீனாவுடனான ஒப்பந்தம் நிறுத்தம்.. நடந்தது என்ன?

பனாமா கால்வாய் விவகாரத்தில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்து, சீனாவுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக பனாமா அதிபர் அறிவித்துள்ளார். என்ன நடந்தது? பனாமாவின் முடிவு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? என்று விரிவாகப் பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர்: ஜி.எஸ்.பாலமுருகன்

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று பனாமா. இங்கு அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கும் வகையில் 82 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைந்துள்ளது பனாமா கால்வாய். சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியப் பாதையாக உள்ளது. காரணம், ஒவ்வொரு ஆண்டும் 14,000 கப்பல்கள் பனாமா கால்வாய் வழியாக செல்கின்றன. உலகளாவிய கடல்சார் வணிகத்தில் சுமார் 6 சதவிகிதமும் அமெரிக்காவின் வர்த்தகத்தில் 50 சதவிகிதமும் பனாமா கால்வாய் வழியாகவே நடக்கின்றன. பனாமா கால்வாய் 1900களின் முற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது.

panama canal

1914இல் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த கால்வாய், 1977இல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, நிர்வகிக்கும் உரிமை பனாமாவுக்கு வழங்கப்பட்டது. உள்நாட்டு போர் அல்லது வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கம் ஏற்பட்டால் பனாமா கால்வாயை அமெரிக்கா மீண்டும் எடுத்துக் கொள்ளும் என்பதே ஒப்பந்தம். பின்னர் ((அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் 1999இல் செய்து கொண்ட )) டோரிஜ்ஜோஸ் - கார்ட்டர் உடன்படிக்கையின்படி பனாமா கால்வாய் பனாமாவிடம் வழங்கப்பட்டது.

சீனாவின் ஆதிக்கம், அதிக கட்டணம் வசூல் போன்ற காரணங்களால், அதிபராக ட்ரம்ப் பதவியேற்றவுடனேயே பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்று அறிவித்தார். சீனாவுடனான ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால் பனாமா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். ட்ரம்பின் மிரட்டலுக்கு முக்கிய காரணம், சர்வதேச அளவில் நாடுகளை இணைக்கும் பெல்ட் அண்டு ரோடு இனிஷியேட்டிவ் என்ற சீனாவின் பெருவழிப் பாதை திட்டம்தான். இதில் 2017இல் பனாமாவும் இணைந்தது. மேலும் பெரும் முதலீடுகளை செய்ததன் காரணமாக பனாமாவின் முக்கிய நட்பு நாடாக சீனா மாறியது. பனாமா கால்வாயை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டிய சூழலில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, தனது முதல் வெளிநாட்டு பயணமாக பனாமா சென்றார்.

panama canal

அதிபர் ட்ரம்பின் நிலைப்பாட்டை பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முலினோவிடம் ரூபியோ எடுத்துரைத்தார். இதையடுத்து, சீனாவுடன் செய்துகொண்ட பெருவழிப்பாதை திட்ட ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கப்போவதில்லை என்று பனாமா அதிபர் முலினோ அறிவித்தார். திறமையான பொறியியல் செயல்முறையில் உருவான இந்த பனாமா கால்வாய், உலக வர்த்தகத்தில் ஒரு புரட்சிகர கட்டமைப்பாக பார்க்கப்படுகிறது. 110 ஆண்டுகள் வரலாற்றை கொண்டிருக்கும் பனாமா கால்வாய் மீண்டும் அமெரிக்காவுக்கு செல்லவிருப்பதால், சீனா சினம் கொள்ளுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.