ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கைவிடும் வரை காசாவிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ளப் போவதில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
செய்தியாளர்; M. மீரா
காசா முனையில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், இந்த அமைதித் திட்ட ஆவணத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நெதன்யாகு, "நான் இஸ்ரேலின் பிரதமராகப் பொறுப்பில் இருக்கும் காலம் வரை, காசா பகுதியிலோ அல்லது மேற்குக் கரையிலோ ஒருபோதும் தனிப் பாலஸ்தீன நாடு உருவாக்க விடமாட்டேன் என்று மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அமெரிக்காவின் சில கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பிற்கு எதிரான அம்சங்களைத் தங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் முழுமையாகத் தங்களை ஆயுதப்படை நீக்கம் செய்து கொள்ளும் வரை, இஸ்ரேலிய ராணுவப் படைகள் காசாவிலிருந்து திரும்பப் பெறப்பட மாட்டாது என்றும் நெதன்யாகு கூறியுள்ளார். இஸ்ரேல் குடிமக்களுக்கும் ராணுவத்திற்கும் எதிரான அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்தத் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். முன்னதாக, ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களைக் கைவிடவும் இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறவும் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
கடந்த அக்டோபரில் எட்டப்பட்ட போர்நிறுத்தத்திற்குப் பிறகும் காசாவில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு மற்றும் ஹமாஸின் ஆயுதங்களை கைவிடுதல் போன்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவி வருகிறது.
தற்போது நெதன்யாகுவின் இந்த பகிரங்க அறிவிப்பால், மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவரும் அமெரிக்காவின் தூதரக முயற்சிகளுக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.