இந்துப் பெண்களை கட்டாயமாக மதமாற்றம் செய்வதற்கு எதிராகப் பேசியதற்காக ஓர் இஸ்லாமியக் குழுவிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மை உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் சிறுபான்மை உரிமைகள் அமைப்பான தாராவர் இத்தேஹாத்தின் தலைவரும் நிறுவனருமான ஷிவா கச்சி, சிந்து மாகாணத்தில் இந்துமதச் சிறுமிகள் மற்றும் திருமணமான பெண்களைக் கடத்தி கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்தும் அது தொடர்பான தகவல்களையும் நீண்டகாலமாக ஆவணப்படுத்தி வருகிறார். இதுதொடர்பாக, அவர் அதிகாரிகளிடம் பலமுறை புகார்கள் அளித்தபோதிலும், கூட்டாட்சி மற்றும் சிந்து அரசாங்கங்கள் மற்றும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்துப் பெண்களை கட்டாயமாக மதமாற்றம் செய்வதற்கு எதிராகப் பேசியதற்காக ஷிவா கச்சிக்கு, இஸ்லாமியக் குழு ஒன்று கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து, அவர், தனது உயிருக்கு உடனடி ஆபத்து இருப்பதாகவும், அரசாங்கம் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் (TLP ) (சர்ஹிந்தி குழு) உடன் தொடர்புடைய மதகுருமார்கள் மிரட்டியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏதாவது நடந்தால், பாகிஸ்தான் அரசுதான் பொறுப்பு’ எனச் சொல்லி வீடியோவும் வெளியிட்டுள்ளார். ’இன்றைய மௌனம் நாளை தீவிரவாதிகளுக்கு தைரியத்தை அளிக்கும். தாமதமான பாதுகாப்பு பாதுகாப்பு மறுக்கப்படுவதற்கு சமம்’ எனவும் குறிப்பிட்டுள்ள அவர், ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில், அம்னஸ்டி இன்டர்நேஷனல், மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் உடனடியாகத் தலையிடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். இது, பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கச்சி, இப்படி எச்சரிக்கை மணி அடிப்பது இது முதல் முறை அல்ல. அவர், ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தப்பட்ட இந்துப் பெண்களை மீட்டு அவர்களது குடும்பங்களுடன் இணைக்க உதவிய பின்னர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பதிவிட்டிருந்தார்.
பாகிஸ்தானின் பெரும்பாலான இந்துக்கள் சிந்து மாகாணத்திலேயே அதிகம் வசிக்கின்றனர், இது நாட்டின் 4-5 மில்லியன் இந்து மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 94% மக்களைக் கொண்டுள்ளதாக அந்நாட்டு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 2023ஆம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவுகளின்படி, சிந்து மாகாணத்தில் உள்ள உமர்கோட் மாவட்டம், நாட்டின் ஒரே இந்து பெரும்பான்மை உள்ள மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் மக்கள்தொகையில் இந்துக்கள் தோராயமாக 52% பேர் உள்ளனர். இந்த மாவட்டம் பற்றிய செய்தியைத்தான் ஷிவா கச்சி வெளியிட்டிருந்தார்.