ஷபாஸ் ஷெரீப் எக்ஸ் தளம்
உலகம்

”பதிலடிக்கு தயாரானோம்.. ஆனால்” - இந்திய தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்!

பாகிஸ்தானுக்குள் பல இலக்குகளை இந்திய ஏவுகணைகள் தாக்கியதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார்.

Prakash J

பஹல்காம் தாக்குலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால், இது அனைத்தையும் இடையிலேயே இந்தியா வழிமறித்து அழித்தது. இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் மீது இந்திய ராணுவம் விமானப்படை தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இருதரப்பிலும் தாக்குதல் தொடர, அமெரிக்காவின் தலையீட்டின்பேரில் போர் முடிவுக்கு வந்தது. எனினும், இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத பாகிஸ்தான், அதை வெற்றியாகக் கொண்டாடியது. அதற்காக பல பொய்ச் செய்திகளைப் பரப்பியது. ஆனால், அவை சொன்ன அனைத்துக்கும் இந்தியா ஆதாரத்துடன் பதில் அளித்தது. அதிலும், 2019இல் சீன ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டபோது, எடுக்கப்பட்ட படத்தை தங்களுடையது போன்று காண்பித்து உலக நாடுகளை ஏமாற்றியது. ஆனால், பின்னர் அந்த உண்மையால் அதுவே தலைகுனிந்தது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாகிஸ்தான் வெற்றிக்காக அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனீருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. இது, இணையத்தில் மேலும் விவாத்தை ஏற்படுத்தியது.

ஷபாஸ் ஷெரீப்

இந்த நிலையில், இந்தியா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக் கொண்டுள்ளார். அவர், ”மே 9 -10ஆம் தேதி இரவுகளில் இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது என முடிவு செய்தோம். காலை 4:30 மணி தொழுகைக்குப் பிறகு தாக்குதல் நடத்துவது என படைகள் தயாராகி வந்தன. ஆனால், அதற்கு முன்னர், பிரமோஸ் உள்ளிட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி ராவல் பிண்டி விமான நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அதிகாலை என்னிடம் தெரிவித்தார்” என அவர் கூறியுள்ளார்.