Pakistan, Kuwaiti x page
உலகம்

ராணுவத்தை எல்லாம் அனுப்ப முடியாது.. பயப்படுகிறதா பாகிஸ்தான்? மத்திய கிழக்கில் நடப்பது என்ன?

குவைத் அரசின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

Praveen Joshva L

சவூதி அரேபியா நீண்டகாலமாக பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறது. இந்தச் சூழலில், கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பரில் இரு நாடுகளும் ஒரு ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி ஒரு நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் மற்றொரு நாடு உதவிக்கு வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் சவூதி அரேபியாவில் நிலைகொண்டு அங்கு சவூதி அரேபிய எல்லைப் பாதுகாப்பு மற்றும் ராணுவ வீரர்களுக்கான பயிற்சிகளில் நேரடியாகப் பங்காற்றி வருகின்றனர். மேலும், இரு நாடுகளும் கூட்டு ராணுவப் பயிற்சிகளிலும் பங்கேற்று வருகின்றன. இதற்குப் பதிலாக சவூதி அரேபியா பில்லியன் கணக்கில் கடன் உதவிகளையும், நிதியுதவிகளையும் பாகிஸ்தானுக்கு வழங்கி ஆதரவளித்து வருகிறது. அதோடு, பாகிஸ்தானுக்குத் தவணை முறையில் சலுகை விலையில் கச்சா எண்ணெய்யையும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில், சவூதி அரேபியாவைப்போல தங்கள் நாட்டுடனும் ஒரு முழுமையான பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டு பாகிஸ்தான் படைகளை தங்கள் நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வளைகுடா நாடான குவைத் கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஏற்கெனவே சவூதி அரேபியாவுடன் மேற்கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தால், பாகிஸ்தானின் எல்லை நாடான ஈரான் பாகிஸ்தான் மீது அதிருப்தி அடைந்தது. இந்தச் சூழலில் அமெரிக்க - ஈரான் போரில் ஈரான் ராணுவம் சவூதி, குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் குவைத் அரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினால், அது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்பதால்தான் இந்தப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ஏற்க மறுத்ததாக சர்வதேச விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குவைத் பாதுகாப்பு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிராகரித்தாலும், அந்நாட்டு ராணுவத்தினருக்கு பயிற்சிகளை வழங்குவது மற்றும் உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.