pakistan reuters
உலகம்

நண்பனுக்கு உதவி செய்யாத பாகிஸ்தான்..? அதிர்ந்து நிற்கும் சவூதி அரேபியா!

சவூதி அரேபியாவின் முக்கியக் கோரிக்கையை ஏற்க பாகிஸ்தான் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

சவூதி அரேபியா மீது ஏமன் நாட்டின் ஒரு பகுதியில் வசிக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பெரும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 14 பேர் உயிரிழந்தனர். இன்னும் பல்வேறு இடங்களில் தாக்குதலை மும்முரமாக்க ஹவுதி கிளர்ச்சியாளர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில், பெரும் உதவிகளைச் செய்யும் என்று நினைத்த நட்பு நாடான பாகிஸ்தான், துரோகம் இழைத்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. அதாவது, சவூதி அரேபியாவில் நடந்து வரும் தொடர் தாக்குதல்களால், மெக்கா ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் போர் வீரர்களும், JF-17 ரக போர் விமானங்களும், அங்கு களமிறக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய படைகள் அங்கு இறங்கியபோதிலும், சவூதி அரேபியாவுக்கு தேவையான உதவிகளை அது அங்கு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

saudi arabia

சவூதியின் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், உளவுத்துறை தகவல்களைப் பகிர்வதிலும் மட்டுமே பாகிஸ்தான் ஈடுபடுகிறதே தவிர, நேரடியாக ஏமனுக்குள் நுழைந்து ஹவுதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட பாகிஸ்தான் மறுத்துவிட்டது. சவூதி அரேபியா அரசு இதுகுறித்து நேரடியாக முறையிட்டபோதும், தற்காப்பு உதவிகளை மட்டுமே பாகிஸ்தான் அளித்து வருகிறது. பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு பாகிஸ்தான் ஆளானபோது, ஆதரவுக் கரம் நீட்டி அந்நாட்டைக் காப்பாற்றியது சவுதி அரேபியாதான்.

சமூக, மதரீதியாக, பொருளாதார ரீதியாக ஒரே கூட்டணியாக இருந்தபோதிலும், இந்த நிலைப்பாட்டை பாகிஸ்தான் எடுத்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கியுள்ளது. இதனால், நீண்டகால போரில் ஈடுபடும் திறன் அந்த நாட்டிடம் இல்லை. இதன்காரணமாக, சவூதி அரேபியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதுமட்டுமின்றி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் தனது ராஜதந்திர உறவு கெட்டுபோய்விடக் கூடாது என்பதிலும், பாகிஸ்தான் கவனமாக உள்ளது. வாய்வழி வார்த்தைகளிலும், காகித ஒப்பந்தங்களிலும் இரு நாடுகளும் சிறந்த கூட்டாளிகள் எனக் கூறப்பட்டாலும், ஆபத்து காலத்தில் சவூதி அரேபியாவிற்கு களத்தில் இறங்கி நேரடியாக உதவ பாகிஸ்தான் தயங்குவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதனால் சவூதி - பாகிஸ்தான் இடையேயான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்கள் நிஜமாகவே போர் நடக்கும்போது எந்தளவுக்குப் பயனளிக்கும் என்ற பெரிய கேள்வியை இது எழுப்பியுள்ளது.