Houthis  Reuters
உலகம்

சவுதிக்கு ஆபத்து.. படைகளை களமிறக்கிய பாகிஸ்தான்!

சவுதி அரேபியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அந்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புப் பிரிவான ISPR தெரிவித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இதில் சவுதி அரேபியாவின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்தன.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மூன்று நாடுகளும் முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அது மற்ற இரு நாடுகள் மீதான தாக்குதலாகவும் கருதப்படும். இதன் அடிப்படையில் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

yemen war - file photo

இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையில் பாகிஸ்தான் சவுதிக்கு ஆதரவாக படைகளை அனுப்பி வைத்துள்ளது. ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவின் நகரங்கள், எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கடல் வழிப் போக்குவரத்துப் பாதைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பாகிஸ்தான் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த பாகிஸ்தான் தனது ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது.

சவுதி அரேபியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அந்நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புப் பிரிவான ISPR தெரிவித்துள்ளது. எத்தனை வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை பாகிஸ்தான் ராணுவம் வெளியிடவில்லை.