50,000 முன்னாள் வீரர்களை காணவில்லை: அதிர்ச்சி கொடுத்த பிரிட்டன் அரசு ! நடந்தது என்ன?
பிரிட்டன் அரசு 95,000 முன்னாள் ராணுவ வீரர்களின் விவரங்களை புதுப்பிக்க முயற்சித்தபோது, 50,000 வீரர்களின் தகவல்கள் இல்லை என அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனால் ராணுவத்தைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பனிப்போருக்குப் பிறகு ரிசர்வ் வீரர்களை தயாராக இருக்க அறிவுறுத்திய பிரிட்டன், புதிய திட்டங்களை உருவாக்க முடிவு செய்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே நடந்துவரும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த போரில் நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் தீவிர ஆதரவை அளித்து வருகின்றனர். இதன் காரணமாக ரஷ்யா நேட்டோ நாடுகள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த நாடுகள் தங்கள் ராணுவ பலத்தை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் பிரிட்டனும் ராணுவத்துக்கான பட்ஜெட்டை அதிகரித்த நிலையில், தற்போது ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதற்காக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் (UK Ministry of Defence) தனது ரிசர்வ் ராணுவ பிரிவில் உள்ள சுமார் 95,000 முன்னாள் ராணுவ வீரர்களின் விவரங்களைப் புதுப்பித்து வருகிறது. ஆனால் இதில் சுமார் 50 ஆயிரம் வீரர்கள் எங்கு இருக்கிறார்கள்,அவர்களின் முகவரி என்ன என்பது குறித்த எந்த விவரமும் அரசிடம் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வீரர்கள் தயாராக இருப்பதை உறுதிசெய்யுமாறு ராணுவ தலைமையகம் உத்தரவிட்ட நிலையில், அது குறித்து விவரங்களை வீரர்களுக்கு அனுப்ப அவர்களின் முகவரிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் 50 ஆயிரம் வீரர்கள் குறித்த விவரங்கள் அரசிடம் இல்லாததால் அவர்களை அரசால் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பழைய வீரர்களின் விவரங்களை திரட்டவும், புதிய ரிசர்வ் வீரர்களை திட்டவும் பிரிட்டன் அரசு முடிவெடுத்துள்ளது. பனிப்போருக்குப் (Cold War) பிறகு முதல்முறையாக, பிரிட்டன் அரசு ரிசர்வ் வீரர்களை தயாராக இருக்க அறிவுறுத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. அதே நேரம் முன்னாள் வீரர்களின் விவரங்களை ராணுவம் தொலைத்துள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

