பாதுகாப்பு ஒப்பந்தத்தின்கீழ் பாகிஸ்தான் 8,000 துருப்புகளையும் விமானங்களையும் சவுதிக்கு அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி, பாகிஸ்தான் 8,000 துருப்புகளுடன், சுமார் 16 விமானங்களைக் கொண்ட ஒரு முழுப் படைப்பிரிவை நிலைநிறுத்தியுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிறுத்துவதற்கு பாகிஸ்தான் இருதரப்பிலும் மத்தியஸ்தம் செய்து வருகிறது. எனினும், இவ்விவகாரத்தில் சுமுகம் ஏற்படவில்லை. இதனால் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு போர்ப் பதற்றத்திலேயே காணப்படுகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ‘நேரம் கடக்கிறது; விரைவாக முடிவெடுங்கள்; இல்லையெனில், அவர்களிடம் எதுவும் மிஞ்சியிருக்காது’ என எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், பாதுகாப்பு ஒப்பந்தத்தின்கீழ் பாகிஸ்தான் 8,000 துருப்புகளையும் விமானங்களையும் சவுதிக்கு அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின்கீழ், பாகிஸ்தான் 8,000 துருப்புகள், ஒரு போர் விமானப் படைப்பிரிவு மற்றும் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பை சவூதி அரேபியாவிற்கு அனுப்பியுள்ளது என்று பாகிஸ்தானின் உயர்மட்ட இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தகவல்களின்படி, பாகிஸ்தான் 8,000 துருப்புகளுடன், சுமார் 16 விமானங்களைக் கொண்ட ஒரு முழுப் படைப்பிரிவை நிலைநிறுத்தியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சீனாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட JF-17 ரகப் போர் விமானங்கள் ஆகும். இவை ஏப்ரல் மாத தொடக்கத்தில் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டன. மேலும், பாகிஸ்தான் இரண்டு ஆளில்லா விமானப் படைப்பிரிவுகளும் அனுப்பப்பட்டுள்ளன. சவூதி அரேபியா மேலும் தாக்குதலுக்கு உள்ளானால், அதன் இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட ஒரு கணிசமான, போரிடும் திறன் கொண்ட படை இது என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ஆனால், இதுகுறித்து சவூதி மற்றும் பாகிஸ்தான் ராணுவமோ, வெளியுறவுத் துறையோ எந்தவொரு அதிகாரப்பூர்வமாகச் செய்தியையும் வெளியிடவில்லை. ஆனால், கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஒரு தாக்குதல் நிகழும் பட்சத்தில், பாகிஸ்தானும் சவூதி அரேபியாவும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பிற்கு வர வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, மத்தியஸ்தத்தில் ஈடுபடும் பாகிஸ்தான், சவூதி அரேபியாவுக்கு வழங்கியிருக்கும் ஆதரவும் கேள்விக்குள்ளாகி உள்ளது.