Pakistan - Afghanistan conflict  X
உலகம்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே தொடரும் தாக்குதல்.. சீனா, ரஷ்யா கவலை!

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசாங்கத்திற்கும் இடையே இப்போது, வெளிப்படையான போர் நடந்துவருவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.

PT WEB

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மோதல் அதிகரித்ததைத் தொடர்ந்து, காபூல், பாக்டியா மற்றும் காந்தஹார் போன்ற நகரங்களில் உள்ள பல ராணுவ நிறுவல்களை குறிவைத்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான், 'ஆபரேஷன் கஜிப் லில்-ஹக்' என்ற ஆபரேஷனைத் தொடங்கியது.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் கடந்த ஆண்டு இறுதியில் தாக்குதல் நடைபெற்ற நிலையில், அது பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், காபூலில் தொடர்ந்து தாக்குதல்கள் நடப்பதாலும் எல்லையில் சண்டை தொடர்வதாலும், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசாங்கத்திற்கும் இடையே இப்போது வெளிப்படையான போர் நடந்து வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அறிவித்துள்ளார். மேலும் ”எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது. இப்போது எங்களுக்கும் உங்களுக்கும் நேரடிப் போர்” என்று தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் தனது சமீபத்திய ராணுவத் தாக்குதலில் 133 ஆப்கானிஸ்தான் தாலிபன் போராளிகள் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது. இதனை ஆப்கானிஸ்தான் அரசு செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். பாகிஸ்தான் விமானப்படை (PAF) ஜெட் விமானங்கள், ஆப்கானிஸ்தானின் காந்தஹார் பகுதியில் வானில் ரோந்து செல்வதாக பாகிஸ்தானின் டான் செய்தித்தாள் செய்தி உறுதிபடுத்தியுள்ளது.

Pakistan-Afghanistan conflict

முன்னதாக, பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலுக்கு, நேற்று (பிப்.26) ஆப்கானிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 55 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் தெரிவித்தது. மேலும், தங்கள் நாட்டு வான் பரப்புக்குள் நுழைந்த பாகிஸ்தான் வானூர்தி ஒன்றையும் சுட்டு வீழ்த்தியதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல்​கள் அதி​கரித்து வருகிறது. இரண்டு நாடுகளும் அக்டோபர் 2025-இல் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பின்னரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை 

பாகிஸ்தான் தாலிபன் அல்லது TTP 2007ஆம் ஆண்டு வடமேற்கு பாகிஸ்தானில் செயல்படும் பல ஆயுதக் குழுக்களால் உருவாக்கப்பட்டது. பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்திடம் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தானுக்கு (TTP) எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரி வருகிறது, மேலும் இந்த கோரிக்கை சமீபகாலமாக தீவிரமடைந்துள்ளது.

TTP

இந்தக் கோரிக்கைக்குப் பின், இருதரப்புக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது, இந்தப் பதற்றத்தைக் குறைக்க அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் நடத்தப்பட்ட போதிலும், மோதல் முடிவுக்கு வரவில்லை. 133 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட துரந்த் கோடு (எல்லைக்கோடு) தான் இன்னும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பதற்றத்துக்கு முக்கியக் காரணமாக உள்ளது. ஆனால், அது ஆப்கானிஸ்தானால் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளரான சர் ஹென்றி மோர்டிமர் துரந்த் மற்றும் ஆப்கானிஸ்தானின் அமீர் அப்துர் ரஹ்மான் கான் ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் மோதலின் பின்னணி - துரந்த் கோடு

ஒருபக்கம் ஆப்கானிஸ்தானின் 12 மாகாணங்களும், மறுபக்கம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான் மற்றும் கில்கித்-பல்டிஸ்தான் பகுதிகளும் உள்ளன. இருபுறமும் உள்ள மக்கள் கலாசார ரீதியாகவும், மத ரீதியாகவும் மிகவும் நெருக்கமானவர்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும் துரந்த் கோட்டைத் தனது பிராந்திய ஒருமைப்பாட்டில் தலையிடுவதாகக் கருதி, அதை அங்கீகரிக்க மறுக்கிறது. ஆனால், பாகிஸ்தான் தனது கூட்டாட்சி அமைப்பைக் குலைக்கக்கூடிய பஷ்தூன் தேசியவாதத்தை ஒடுக்கவும், பிரிவினையைத் தடுக்கவும் இக்கோட்டை அங்கீகரிக்கிறது. ஆப்கன் குடிமக்கள் இதைத் தங்களது பஷ்தூன் நிலத்தின் தன்னிச்சையான பிரிவினையாகக் கருதி இன்றும் போராடி வருகின்றனர்.

Durand Line

ஈரான், ரஷ்யா மற்றும் சீனா கவலை

காபூலுக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையிலான மோதல் அதிகரிப்பது குறித்து ஈரான், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கவலை தெரிவிக்கின்றன. இருநாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையை எளிதாக்குவதற்கும், புரிதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க ஈரான் தயாராக உள்ளது" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.