அண்டை நாடான பாகிஸ்தான், சமீபகாலமாக அமெரிக்காவுடன் நெருங்கிய உறவு கொண்டிருக்கிறது. அதற்கு உதாரணம், தற்போது பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அசீம் முனீர் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா சென்று அதிபர் ட்ரம்புடன் இரவு விருந்து உட்கொண்டார். அமெரிக்க அதிபர் ஒருவர், பாகிஸ்தானின் இராணுவத் தளபதியை தனியாக உபசரித்தது அதுவே முதல் முறை. இதனால் அந்தச் சந்திப்பை உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கின. தவிர, அந்நாட்டின் ராணுவ அணிவகுப்பின்போதும் முனீர் கலந்துகொண்டார். அப்போது, இருநாட்டு உறவுகள் மேலும் மேம்பட்டன. அதற்குப் பிறகு ராணுவம் தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இந்த நிலையில், அசீம் முனீர் மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்திக்க உள்ளார். இந்தப் பயணம் வரும் வாரங்களில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. அவருடைய இந்தச் சந்திப்பு, காஸாவின் மறுகட்டைப்புக்கான நடவடிக்கை குறித்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற இஸ்ரேல் - காஸா போர், அதிபர் ட்ரம்பின் தலையீட்டின்பேரில் தற்போது போர் நிறுத்தம் கண்டுள்ளது. இதற்காக அதிபர் ட்ரம்ப், 20 அம்சத் திட்டம் ஒன்றைப் பரிசீலித்திருந்தார். அதற்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டன.
இந்த நிலையில், அதைச் செயல்படுத்தும் பணியில் அமெரிக்கா முனைந்துள்ளது. அதன்படி, அமெரிக்க ஆதரவு திட்டத்தின் கீழ் காஸாவில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபடுத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக, இந்தோனேசியா, மலேசியா, சவுதி அரேபியா, துருக்கி, ஜோர்டான், எகிப்து, அஜர்பைஜான் மற்றும் கத்தார் போன்ற நாடுகளைச் சேர்ந்த இராணுவ மற்றும் சிவிலியன் தலைவர்களை முனீர் சமீபகாலமாக சந்தித்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது காஸா படை குறித்த ஆலோசனைகள் என்றும் உறுதிப்படுத்தப்படுகிறது.
இந்த நடவடிக்கை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஆழமாக எதிர்க்கும் பாகிஸ்தானின் இஸ்லாமியக் கட்சிகளிடமிருந்து மீண்டும் எதிர்ப்புகளைத் தூண்டக்கூடும் என்கிற பேச்சும் எழுந்துள்ளது. எனினும், பாகிஸ்தான் அதைப் பற்றி கவலைப்படாமல் அமெரிக்காவையே முழுமையாக நம்பியுள்ளது. ஆகையால், அந்நாடு ட்ரம்பின் உத்தரவுக்கு மறுப்பு தெரிவிக்காது என்பதில் எந்த வித ஐயமும் இல்லே என்றே சொல்லப்படுகிறது.
அதற்குக் காரணம், பாகிஸ்தான் கடந்த சில வருடங்களாகவே பொருளாதாரப் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது. அதைச் சமாளிக்க உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல இடங்களில் அது கடன் வாங்கி வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எஃப்-16 போர் விமானங்களை விற்பது உள்பட ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா பெரிய அளவில் முதலீடு செய்து பாதுகாப்பு உதவிகளை வழங்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் மிகவும் ஆர்வமாக உள்ளது. மேலும், அமெரிக்கா செய்யும் இந்த உதவி மூலம் தனது பலத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இது, எதிர்காலத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் ஏதேனும் உரசல்களோ அல்லது சிக்கல்களோ ஏற்பட்டால் அப்போது வசதியாக இருக்கும் என்று நம்புகிறது. அதன் காரணமாகவே, பாகிஸ்தான் அமெரிக்காவின் உத்தரவைக் கண்டிப்பாக மறுக்காது எனவும், அது கட்டாயம் காஸாவிற்குப் பயணிக்கும் எனவும் கூறப்படுகிறது.