model image meta ai
உலகம்

டெல்லியில் 2வது திருமணம்.. பிரதமர் மோடியின் உதவியை நாடும் பாகிஸ்தான் பெண்!

டெல்லியில் இரண்டாவது திருமணம் செய்ய ரகசியமாக திட்டமிட்டிருந்த தனது கணவர், தன்னை கைவிட்டதாக பாகிஸ்தானிய பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Prakash J

டெல்லியில் இரண்டாவது திருமணம் செய்ய ரகசியமாக திட்டமிட்டிருந்த தனது கணவர், தன்னை கைவிட்டதாக பாகிஸ்தானிய பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சி பகுதியைச் சேர்ந்தவர், நிகிதா நாக்தேவ். இவர், நீண்டகால விசாவில் இந்தூரில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த விக்ரம் நாக்தேவ் என்பவரை 2020 ஜனவரி 26ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். ஒருமாதம் கழித்து, பிப்ரவரி 26, 2020 அன்று, விக்ரம் அவரை இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளார். அதன்பிறகு, ஜூலை 9, 2020 அன்று, விசா பிரச்சினை காரணமாக அவரை, விக்ரம் அழைத்துச் சென்று அட்டாரி எல்லையில் கைவிட்டு வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பியதாக நிகிதா கூறியுள்ளார். அதனபிறகு, விக்ரம் தன்னை மீண்டும் அழைத்து வர எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தனது கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் உறவு இருந்ததாகவும், அதை தன் மாமியாரிடம் தெரிவித்ததாகவும், ஆனால், அதை அவர் நிராகரித்துவிட்டதாகவும் நிகிதா தெரிவித்துள்ளார்.

நிகிதா

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிகிதா, கடந்த ஜனவரி மாதம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிந்தி பஞ்ச் மத்தியஸ்தம் மற்றும் சட்ட ஆலோசனை மையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக அது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையின் முடிவில், இரு பெண்களும் இந்தியக் குடிமக்கள் இல்லாததால், இந்த விஷயம் பாகிஸ்தானின் அதிகார வரம்பிற்குள் வருவதாகவும், விக்ரமை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துமாறும் மத்திய அரசு பரிந்துரைத்தது. இதற்கு முன்னதாகவும் நிகிதா, இந்தூர் பஞ்சாயத்தில் விக்ரம் மீது குற்றஞ்சாட்டியிருந்தார். அப்போதும் அவர் நாடு கடத்தப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இரு நாடுகளிலும் உள்ள சமூக மற்றும் சட்டக் குழுக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிகிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “என்னை இந்தியாவுக்கு அழைக்கும்படி நான் அவரிடம் (விக்ரம்) தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் மறுத்துவிட்டார். இன்று எனக்கு நீதி வழங்கப்படாவிட்டால், பெண்கள் அமைப்பின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள்.

பல பெண்கள் தங்கள் திருமண வீடுகளில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துஷ்பிரயேகத்தை எதிர்கொள்கின்றனர். அனைவரும் என்னுடன் நிற்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” என நீதி கேட்டு பிரதமர் மோடியின் உதவியை அவர் நாடியுள்ளார். தனது கணவர், டெல்லியில் இரண்டாவது திருமணத்திற்குத் தயாராகி வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.