செய்தியாளர்
பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்த தி ரெசிடன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணை முடிவடையாமல் இருப்பதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. தீவிரவாததுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் முன்னணியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. டிஆர்எஃப்க்கு அமெரிக்கா தடை விதிக்க காரணம் என்ன?... இந்த அமைப்பால் இந்தியாவில் ஏற்பட்ட தாக்கம் என்ன? விரிவாக பார்க்கலாம்...
அண்மையில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே பயங்கர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பான டிஆர்எஃப் சுற்றுலா பயணிகள் மீதான இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்ததாக சொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த கேள்வி எழுந்தது. 2008இல் மும்பையில் நடந்த தாக்குதலுக்குப் பின் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக பஹல்காம் தாக்குதல் பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த டிஆர்எஃப் அமைப்பை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது.
பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படுவதாக சொல்லப்படும் லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு 2019இல் தோற்றுவிக்கப்பட்டது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் இந்த தோற்றுவிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆன்லைன் வாயிலாக இளைஞர்களை தங்கள் அமைப்பில் சேர்த்து, பயங்கரவாத செயல்களில் இந்த அமைப்பு ஈடுபடுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த 2023இல் இந்த அமைப்புக்கு தடை விதித்து, அதன் நிறுவனரை பயங்கரவாதியாகவும் இந்தியா அறிவித்திருந்தது. 2024இல் இந்திய பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஹந்த்வாரா மோதல்கள் உள்ளிட்ட பலவற்றிற்கு இந்த டிஆர்எஃப் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.
இந்த சூழலில் டிஆர்எஃப் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு மற்றும் சிறப்பு உலகளாவிய பயங்கரவாதிகள் அமைப்பு பட்டியலில் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பை இந்தியா வரவேற்றுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை இது காட்டுவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிவிட்டிருந்தார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் அந்த அமைப்புக்கு பெறப்படும் நிதியுதவிகள் தடை செய்யப்படுவதோடு, அமெரிக்காவில் உள்ள இந்த அமைப்பில் தொடர்புடைய நபர்களின் சொத்துகள் முடக்கப்படும். அமெரிக்க நிதி நிறுவனங்கள் டிஆர்எஃப் உடனான பரிவர்த்தனைகளை தடை செய்வதோடு, தொடர்புடைய நபர்கள் மீது பயணத்தடை விதிக்கப்படும்.
இந்த சூழலில் தங்கள் நாடு பயங்கரவாதத்துக்கு எதிரான அரணாக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. லஷ்கர் இ-தொய்பா அமைப்பு என்றோ செயலிழந்து விட்டது; அந்த அமைப்பின் மூளையாக செயல்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்; உலக அமைதிக்காக பாகிஸ்தான் பெரும் பங்களிப்பு அளித்துள்ளது; பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணை இன்னும் முடியவில்லை எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தை ஒழிக்கும் தங்கள் கொள்கைக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. டிஆர்எஃப் அமைப்பின் மீது அமெரிக்கா விதித்த தடை பயங்கரவாதத்தை அழிப்பதற்கான அழுத்தத்தை சர்வதேச அளவில் ஏற்படுத்தினாலும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முரணை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது.