கட்டிப்பிடித்தல் என்பது ஓர் எளிய செயல். இந்தக் கட்டிப்பிடித்தல் செயல் மூலம் ஒருவருக்கு அன்பு, ஆதரவு, ஆறுதல், ஆற்றல் என அனைத்தும் கிடைக்கிறது. மேலும், இதன்மூலம் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் விலகுகின்றன என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆம், ஒரு கட்டிப்பிடித்தலின் மூலம் பல்வேறு மருத்துவக் குணப்படுத்தும் சக்திகள் அடங்கியிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், நாம் ஒருவரை கட்டியணைக்கும்போது, நம்முடைய மன அழுத்தம் குறைவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒரு மகிழ்ச்சியான, அன்பு நிறைந்த தொடுதல் என்பது செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது இயற்கையிலேயே மன அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. இன்னும் சொல்லப்போனால், கட்டிப்பிடிப்பதால் உடலில் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் வெளியேறுகிறது. இதை ‘காதல் ஹார்மோன்’ என்றும் குறிப்பிடுவார்கள்.
அப்படியான இந்தக் கட்டிப்பிடி வைத்தியத்தை நடிகர் கமல்ஹாசன், ’வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் பலருக்கும் செய்துகாட்டி, அவர்களை மகிழ்ச்சியுற வைப்பார்.
இந்த நிலையில், சீனாவில் மன அழுத்தத்துடன் இருக்கும் பெண்கள் தங்களின் மனதை இலகுவாக்க, பணம் கொடுத்து ஆண்களைக் கட்டியணைத்துக் கொள்வது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. 'மேன் மம்' (Man Mum) என்ற ஆணிடமிருந்து கட்டிப்பிடிக்க இளம்பெண்கள் 50 யுவான் (சுமார் 9,500 வோன்) செலுத்தி அந்தச் சேவையைப் பெறுவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சேவையைச் செய்யும் ஆண்கள், Man Mum என அழைக்கப்படுகின்றனர். இவர்கள், பெரும்பாலும் பொது இடங்களிலேயே அந்தச் சேவையை வழங்குகின்றனர். அவர்கள் தரும் Hug மூலம் தங்களின் கவலைகளை மறந்து மனநிம்மதியை உணர்வதாக இளம்பெண்கள் கருதுகின்றனர். 'மேன் மம்' என்பது சீனாவில் உடற்தகுதி மூலம் கட்டமைக்கப்பட்ட வலிமையுள்ள ஆண்களைக் குறிக்கிறது. சமீபத்தில், இது உடல்ரீதியாக வலிமையான, ஆனால் கருணையுள்ள மற்றும் அக்கறையுள்ள ஆண்களுக்கான ஒரு புதிய வடிவமாக மாறியுள்ளது. அவர்கள் வழக்கமாக நடத்தை, பொறுமை, உடலமைப்பு மற்றும் தோற்றம் போன்ற பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் தங்கள் பெண்ணைத் தேர்ந்தெடுப்பார்கள்.
மேலும் செய்தியிடல் பயன்பாடுகள் மூலம் சந்திப்பு அட்டவணைகளை ஒருங்கிணைப்பார்கள். அணைப்புகள் முக்கியமாக சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்ற பொது இடங்களில் நடைபெறுகின்றன. ஐந்து நிமிடங்களுக்கு சுமார் 20 முதல் 50 யுவான் வரை (தோராயமாக 4,000 வோன் முதல் 9,500 வோன் வரை) விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தச் சேவையை 34 முறை வழங்கிய ஒருவர், தான் 1,758 யுவான் (சுமார் 340,000 வோல்) சம்பாதித்ததாகத் தெரிவித்துள்ளார்.