2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், 4 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது. நீண்ட தூரம் பயணிக்கும் ட்ரோன்கள் மூலம், மின்நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் கிடங்குகள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்து இருநாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இவ்வாறான, தாக்குதல் நடவடிக்கைகளில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தாலும், 1,087 ரஷ்ய வீரர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தது பிரிட்டனைச் சேர்ந்த தி கார்டியன் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, ராணுவ வீரர்கள் தற்கொலை மற்றும் உயிரிழப்பு தொடர்பான ஆவணங்களை ரஷ்ய அரசு வெளியிடாத போதிலும், பெலாரஸ் மற்றும் உக்ரைன் நாடுகளைச் சேர்ந்த ஹேக்கர் குழுக்களிடம் இருந்து ரஷ்யாவின் 1 கோடிக்கும் அதிகமான மரணச்சான்றிதழ்களை பெறப்பட்டது. அதை ஆய்வு செய்ததில் 2022-ம் ஆண்டு அதாவது உக்ரைன் உடனான போர் தொடங்கியதில் இருந்து 1,087 ரஷ்ய ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததாகவும் தி கார்டியன் தெரிவித்துள்ளது.
மேலும், போர் தொடங்கியதில் இருந்து தற்கொலை எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது என கார்டியன் தெரிவிக்கிறது. அதாவது, 2022-ம் ஆண்டில் 50-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் பதிவாகியிருந்த நிலையில், 2024-ல் இந்த எண்ணிக்கை 200-ஐக் கடந்துள்ளது. 2025-ல் 365 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. 2026-ம் ஆண்டில் செப்டம்பர் வரை கிட்டத்தட்ட 300 மரணங்கள் பதிவாகியுள்ளன எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதேபோல, துப்பாக்கிக் காயங்களால் ஏற்பட்ட மேலும் 885 மரணங்களில் காரணங்கள் தெரிவிக்கப்படாமல் இருந்ததாகவும், இது பெரும்பாலும் தற்கொலைகளாக இருக்கலாம் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்தைகைய தற்கொலைகளுக்கு ஒரே காரணம மட்டும் இருக்க முடியாது என ராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்குப் பின்னால் ராணுவத்திற்குள் நிலவும் கட்டாயப்படுத்துதல், உயர் அதிகாரிகளின் துன்புறுத்தல்கள், ஆபத்தான போர் நடவடிக்கைகளுக்கு அனுப்பப்படுவோம் என்ற அச்சம் உள்ளிட்ட காரணிகள் இருக்கலாம் என ராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ராணுவத்திலிருந்து வெளியேற உதவும் இடிட் லெசோம் (Idite Lesom) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இவான் சுவில்யாயேவ் (Ivan Shvilyaev), உண்மையான தற்கொலை எண்ணிக்கை அதிகாரப்பூர்வப் பதிவுகளில் உள்ளதைவிட அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான், போர்க்கால சூழலில் ரஷ்ய ராணுவ வீரர்களின் தற்கொலைகள் குறித்தான தரவுகள் தற்போது வெளியாகி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.