h1 b visa x page
உலகம்

USA | H1B விசா வைத்திருப்பவர்களின் வாரிசுகளுக்கு சிக்கல்.. 1.34 லட்சம் பேர் வெளியேற்றப்படும் அபாயம்!

அமெரிக்க விசா விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மாற்றங்களால் ஹெ1-பி விசா வைத்திருப்பவர்களின் 21 வயதை அடைந்துவிட்ட வாரிசுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

Prakash J

அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்றாக, குடியேற்றத்தை தடுக்க, முறைப்படுத்த ஏகப்பட்ட விதிகளை மாற்றினார். சட்டவிரோத குடியேற்றம் மட்டுன்றி, சட்டப்பூர்வ குடியேற்றம் தொடர்பாகவும் அவர் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். ட்ரம்ப் அறிவித்த புதிய விதிகளால், இப்போது பல ஆயிரம் இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தனை காலம் அமெரிக்காவில் இருந்த அவர்கள், தற்போது இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் H-4 விசாவின் கீழ் மைனர்களாக அமெரிக்காவில் குடியேறியவர்கள். அதாவது இவர்கள் ஹெச்1 பி விசா வைத்திருப்போரின் குழந்தைகள் ஆவர். ஹெச்1 பி விசா வைத்திருப்போரின் குழந்தைகள் H-4 விசாவின் கீழ் அமெரிக்கா அழைத்துச் செல்லப்படுவார்கள். 21 வயதாகும் வரை H-4 விசாவில் அவர்கள் பெற்றோர் உடன் இருப்பார்கள். இதற்கு முன்பு இருந்த விதிகளின்படி 21 வயதான பிறகு, அவர்கள் வேறு விசா பெற 2 ஆண்டுகள் வரை காலக்கெடு இருக்கும். ஆனால், புதிய விதிகளின் கீழ் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படலாம். அவர்கள் வேறு எந்தவொரு விசாவுக்கும் தகுதி பெற மாட்டார்கள்.

h1 b visa

புதிய விதிமுறைகளின்படி, ஹெச்.1பி விசாவுடன் அமெரிக்காவில் பணியாற்றி வருபவர்களின் குழந்தைகள் 21 வயதைக் கடந்தபின் டிபெண்டண்ட்களாக கருதப்பட மாட்டார்கள். அதாவது ஹெ1- பி விசா வைத்திருப்பவரின் குடும்ப உறுப்பினருக்கான விசாவில் அவர்கள் அமெரிக்காவில் வசிக்க முடியாது. இத்தகையவர்கள் 21 வயதை நிறைவு செய்த இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குள் விசா கிடைக்காவிட்டால் அவர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிவிட வேண்டும். பொதுவாக, ஹெச் 1 பி விசா வைத்திருப்போர் குறிப்பிட்ட கண்டிஷன்களை பூர்த்தி செய்தால் அவர்களுக்கு க்ரீன் கார்டு வழங்கப்படும். ஆனால், நிர்வாக நடைமுறைகளால் க்ரீன் கார்டு வழங்கும் முறை தாமதமாகிறது. இது அங்குள்ள இந்தியர்கள், குறிப்பாக ஹெச்1 பி விசா வைத்துள்ள இந்தியர்களை கடுமையாக பாதிக்கிறது. சரியான நேரத்தில் க்ரீன் கார்டு பெற முடியாதவர்களின் குழந்தைகளே இப்போது சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

இதனால் சிறுவயதில் பெற்றோருடன் அமெரிக்காவுக்குச் சென்ற 1 லட்சத்து 34 ஆயிரம் இந்தியர்கள், அமெரிக்காவில் தொடர்ந்து வசிப்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. அதாவது, கடந்த மார்ச் 2023 நிலவரப்படி, சுமார் 1.34 லட்சம் இந்திய குழந்தைகள் தங்கள் குடும்பங்கள் கிரீன் கார்டுகளைப் பெறுவதற்கு முன்பே 21 வயதை கடந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், ஒரு கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம், சார்புடைய குழந்தைகள் உட்பட, ஆவணமற்ற குடியேறிகளுக்கு நாடுகடத்தலில் இருந்து தற்காலிகமாக இரண்டு ஆண்டு பாதுகாப்பை வழங்கும் எனத் தெரிவித்துள்ளது. என்றாலும் இது நிரந்தரமாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.