வங்கதேசத்தில், இன்குலாப் மோஞ்சோ தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அதுதொடர்பான விசாரணையை 24 நாட்களுக்குள் முடிக்குமாறு அவரது அமைப்பு இறுதிக் கெடு விதித்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தைக் கையிலெடுத்தனர். இது, வன்முறையாக மாறியது. இதையடுத்து, ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதற்கிடையே, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், வங்கதேச பொதுத் தேர்தலையொட்டி, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர் போராட்டத்தை வழிநடத்திய இன்குலாப் மோஞ்சோ தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி, டாக்காவில் தனது பிரசாரத்தைத் தொடங்கியபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். இதில் தலையில் குண்டு காயமடைந்த ஹாடி, உள்ளூர் மருத்துவமனைக்குப் பிறகு சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18ஆம் தேதி மரணமடைந்தார். அவருடைய மரணம், வங்கதேசத்தில் வன்முறைக்கு வழிவகுத்தது.
இந்த சம்பவம் அடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ் தொழிலாளர் அமைப்பின் மையத் தலைவரான 42 வயதான முகமது மொடலெப் சிக்தர், டிசம்பர் 22ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இது, மேலும் வங்கதேசத்தில் பதற்றத்தை உருவாக்கியது. இன்றுவரை அங்கு பதற்றமான சூழல் உருவாகி வரும் நிலையில், உஸ்மான் ஹாடி தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டாக்காவின் ஷாபாக்கைச் சேர்ந்த இன்கிலாப் மோஞ்சோவின் உறுப்பினர் செயலாளர் அப்துல்லா அல் ஜாபர், இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷெரீப் உஸ்மான் ஹாடியின் கொலையில் தொடர்புடைய அனைவரின் விசாரணையையும் 24 நாட்களுக்குள் முடிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள அவர், இந்தியர்களுக்கான பணி அனுமதியை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்தியாவிற்குள் தஞ்சமடைந்திருக்கும் கொலையாளிகளை அந்நாடே திருப்பி அனுப்ப மறுத்தால், சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, உஸ்மான் ஹாடியின் கொலையில் இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் மேகாலயாவுடன் இணைக்கப்பட்டுள்ள மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள ஹலுகாட் எல்லை வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக டாக்கா பெருநகர காவல்துறை (DMP)தெரிவித்திருந்தது. இதையடுத்தே அப்துல்லா அல் ஜாபரின் அறிக்கை வந்துள்ளது. அதேநேரத்தில், டாக்கா பெருநகர காவல்துறையின் கூற்றை, மேகாலயாவின் எல்லைப் பாதுகாப்புப் படை நிராகரித்துள்ளது. அத்தகைய எல்லை தாண்டிய நடமாட்டத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.