donald trump x page
உலகம்

ட்ரம்புக்கு எதிராக 52% அமெரிக்கர்கள்.. அச்சுறுத்தும் 25ஆவது சட்டப்பிரிவு.. அதிபர் பதவிக்கு ஆபத்து?

டொனால்டு ட்ரம்புக்கு எதிராக 52 சதவீத அமெரிக்கர்கள் திரும்பியுள்ள நிலையில், அவரைப் பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

Praveen Joshva L

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல்வேறு நாடுகள் மீது வரி விதிப்பு, வெனிசுலா அதிபரை கைதுசெய்தது, கனடா, கிரீன்லாந்தை கைப்பற்றுவேன் என்ற மிரட்டல் விடுத்தது போன்ற அவரின் நடவடிக்கைகள் சொந்த நாட்டிலேயே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

மேலும் சமீபத்தில் அவர் ஈரான் மீது போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருவதை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, அமெரிக்க மக்களும் விரும்பவில்லை என்றே பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அவரைப் பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

Chris Murphy

அந்த வகையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவரும், செனட்டருமான கிறிஸ் மர்பி (Chris Murphy), ”ட்ரம்ப் ஒரு கட்டுப்பாடற்ற நபராக இருந்து, தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறார். ஆகையால், அவரை 25-ஆவது சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யவேண்டும்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அரசியமைப்பின் 25-ஆவது சட்டத் திருத்தம், பிரிவு 4இன்படி, ஓர் அதிபர் தனது கடமைகளைச் செய்ய உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ தகுதியற்றவர் என்று கருதப்பட்டால், அவரைப் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யலாம்.

இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி ட்ரம்பை பதவியில் இருந்து நீக்கம் செய்யலாம் என அமெரிக்காவில் கோரிக்கை வலுத்துள்ளது. லேக் ரிசர்ச் பார்ட்னர்ஸ் (Lake Research Partners) என்ற நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில் ஈரானுடனான போர் பதற்றங்கள் மற்றும் சில உள்நாட்டுக் கொள்கைகள் காரணமாக, சுமார் 52% பேர், ட்ரம்பை பதவியிலிருந்து நீக்க ஆதரவு தெரிவிப்பதாக தெரியவந்துள்ளது.

ஆனால், இந்த 25-ஆவது சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றால் துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் பெரும்பான்மை அமைச்சர்களின் ஆதரவு தேவைப்படும் என்று கூறப்படுகிறது. ஜேடி வான்ஸ் மற்றும் ட்ரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த பலர் இன்னும் ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு ஆதரவு கொடுப்பதால் ட்ரம்பை பதவி நீக்கம் செய்வது தற்போதைக்கு சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.