மீட்பு மிஷனா.. யுரேனியம் கொள்ளையா? அமெரிக்காவை சந்தேகிக்கும் ஈரான்!
மத்திய கிழக்கில் நீடிக்கும் போரில், ஏப்ரல் 3 அன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க F-15E விமானத்தின் விமானியை மீட்க, அமெரிக்கா 500 மில்லியன் டாலர் செலவில், பல்வேறு ஜெட்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் பங்கேற்ற மிகப்பெரிய இராணுவ நடவடிக்கை நடத்தியது. இதை ஈரான் கடுமையாக விமர்சித்து, இது வெறும் மீட்பு மிஷன் அல்ல என சந்தேகிக்கிறது.
மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் 3 அன்று அமெரிக்காவுக்குச் சொந்தமான F-15E என்ற விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்திருந்தது. இதிலிருந்து விமானி தப்பிச் சென்றதாகவும் கூறியிருந்தது. விமானம் தாக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதில் இருந்த ஒரு விமானி மீட்கப்பட்டார். காணாமல் போன விமானப்படை வீரரை மீட்பதற்காக, அமெரிக்க இராணுவம் அதன் வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த தேடும் பணி 2 நாட்கள் நீடித்தது. இஸ்பஹான் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த மீட்புப் பணிக்கு அமெரிக்கா சுமார் 500 மில்லியன் டாலர் செலவிட்டது. இந்த நடவடிக்கையில் ஏ-10 தண்டர்போல்ட் II ஜெட் விமானங்கள், எம்சி-130ஜே கமாண்டோ II விமானங்கள், பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் எம்க்யூ-9 ரீப்பர் ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு இராணுவச் சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டன; இவற்றில் சில இந்த நடவடிக்கையின் போது அழிக்கப்பட்டன.
அமெரிக்காவின் இந்த மீட்பு நடவடிக்கையை ஒரு மீட்பு நடவடிக்கையாகவே இருந்திருக்காது என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறினார். மேலும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் திருடுவதற்கான ஒரு ஏமாற்று நடவடிக்கையாகக்கூட இருந்திருக்கலாம் என்ற சாத்தியக்கூற்றை முற்றிலுமாகப் புறக்கணிக்கக் கூடாது என்றும் கூறினார. இந்த மீட்பு நடவடிக்கையில் பல கேள்விகளும் நிச்சயமற்ற தன்மைகளும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
"கோகிலுயே (Kohgiluyeh) மற்றும் போயர்-அஹ்மத் ( Boyer-Ahmad Province) மாகாணத்தில் அமெரிக்க விமானி இருந்ததாகக் கூறப்படும் பகுதியானது, மத்திய ஈரானில் அவர்கள் தங்கள் படைகளைத் தரையிறக்க முயன்ற அல்லது விரும்பிய பகுதியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது என்று பாகாயி கூறினார். அவர் இந்த நடவடிக்கையை அமெரிக்காவிற்கு ஒரு பேரழிவு என்றும் குறிப்பிட்டுள்ளார்
ஈரானின் யுரேனியம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
ஈரான் 400 முதல் 450 கிலோகிராம் வரையிலான செறிவூட்டப்பட்ட யுரேனியம் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அளவு அணு ஆயுத உற்பத்திக்குப் பங்களிக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. .
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எடுப்பதற்காக, ஈரானில் ஒரு தரைவழி நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரிசீலித்து வருவதாக கடந்த வாரம் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு நிபந்தனையாக, யுரேனியத்தை ஒப்படைக்குமாறு ஈரானை வலியுறுத்தும்படி ட்ரம்ப் தனது ஆலோசகர்களை ஊக்குவித்துள்ளார் எனவும் அந்த செய்தி கூறியது.
ஈரான் அணுப் பொருட்களைத் தன்வசம் வைத்திருக்க முடியாது என்றும் பேச்சுவார்த்தை மூலம் ஒப்படைக்கக் கூறியும் ஈரான் மறுத்தால் பலவந்தமாகக் கைப்பற்றுவது குறித்தும் ட்ரம்ப் விவாதித்துள்ளார் என்றும் அச்செய்தி கூறுகிறது
ஜூன் 2025-இல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்பு, ஈரான் 400 கிலோகிராமுக்கும் அதிகமான அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையும், ஏறக்குறைய 200 கிலோகிராம் புளூட்டோனியம் 239 (plutonium-239) என்ற பொருளையும் வைத்திருப்பதாக அமெரிக்கா கூறியது. இதை வைத்து எளிதில் 90 சதவிகிதம் ஆயுத தர யுரேனியமாக மாற்ற முடியும்.
அமெரிக்க குண்டுவீச்சுகளில் தாக்கப்பட்ட ஒரு மலை தளத்தின் இடிபாடுகளுக்கு அடியில் தற்போது அதன் பெரும்பகுதி புதைந்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதல்கள் தெஹ்ரானின் அணுசக்தித் திட்டத்தை முற்றிலுமாக அழித்துவிட்டதா டிரம்ப் கூறினார்.
இருப்பினும், ஈரானின் அணுசக்திப் பொருட்கள் முக்கியமாக அமெரிக்கா தாக்கிய மூன்று தளங்களில் இரண்டில் சேமிக்கப்பட்டுள்ளன என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைமை இயக்குநர் ரஃபேல் க்ரோசி கூறியுள்ளார்: அவை இஸ்ஃபஹானில் உள்ள அணுசக்தி வளாகத்தில் உள்ள ஒரு நிலத்தடி சுரங்கப்பாதை மற்றும் நடன்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கு ஆகும்.

