Fly dubai Reuters
உலகம்

ஜூலையிலேயே தாக்குதல் நடத்தத் திட்டம்.. மாஸ்டர் ப்ளான் போட்ட துணை விமானி.. விசாரணையில் பகீர் தகவல்!

ஓமன் நாட்டைச் சேர்ந்த அவர், இந்தத் தாக்குதலில் தனியாகவே செயல்பட்டார் என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Prakash J

ஃபிளைதுபாய் (Flydubai) விமான கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், துணை விமானி ஹம்மாம் அல்-ஹம்மானி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அவர் இதுபோன்ற தாக்குதலை கடந்த ஜூலை மாதமே நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

துபாயிலிருந்து டெல் அவிவ் (இஸ்ரேல்) சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில், இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி கோடரியால் தாக்கி, விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்ற சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடுமையான காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் மன உறுதியுடன் போராடி, காக்பிட் (Cockpit) கதவைத் திறந்து, பயணிககளின் உதவியோடு தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து 170-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார். இதையடுத்து, உலகத் தலைவர்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். அதேவேளையில் ஓமனின் துணை விமானி பற்றிய பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. கைது செய்யப்பட்ட அந்த ஓமன் துணை விமானி தற்போது சவூதி அரேபிய பாதுகாப்பு அமைப்புகளின் விசாரணை வளையத்தில் உள்ளார்.

ஸ்மித் மச்சார்

அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், ஃப்ளைதுபாய் துணை விமானி ஹம்மாம் அல்-ஹம்மானி, இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை ரகசியமாகக் கொலை செய்யவும், விமானத்தின் இயந்திரங்களை அணைக்கவும், டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியன் விமான நிலையத்தின் அருகே பெரிய கட்டடம் அல்லது மற்றொரு விமானத்தின் மீது மோதச் செய்து, வழக்கம்போல் பயணத்தைத் தொடரத் திட்டமிட்டிருந்ததாகவும் ஓமன் நாட்டைச் சேர்ந்த அவர் இந்தத் தாக்குதலில் தனியாகவே செயல்பட்டார் என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அபாய எச்சரிக்கையைத் தவிர்ப்பதற்கும், தாக்குதலை நடத்துவதற்குத் தனக்குப் போதுமான நேரத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும், துணை விமானி, விமானம் ஜோர்டானுக்கு மேலே வரும் வரை காத்திருந்து கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயற்சி செய்ததாகவும், ஜூலை மாதத்திலேயே இந்தத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் விமானக் குழுவில் ஒருவருடன் நட்பாக இருந்ததால் கடைசி நேரத்தில் அத்திட்டத்தைக் கைவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.