ஒலிம்பிக், பாராலிம்பிக், ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் போன்ற மிகப்பெரிய மேடைகளில், விளையாட்டுத் துறைகளில் சிறந்த கட்டமைப்புடன் இருக்கும் வளர்ந்த நாடுகள் பதங்கங்களை வெல்வது வேறு. ஆனால், இந்தியா பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த நாடுகளும் பதக்கங்களை வெல்வது வேறு.
முதல் வகையில், ஒரு நாட்டின் கட்டமைப்பு மிகச்சிறந்த வீரரை உருவாக்கும். இரண்டாவது வகையிலோ சிறந்த வீரர் ஒருவர் தனது நாட்டிற்காக பதக்கத்தை வென்று கொடுப்பார். அப்படி, புதிய ஈட்டியைக் கூட வாங்க முடியாத நிலையில் இருந்த நதீம்தான், பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது நாட்டிற்காக பதக்கத்தை வாங்கிக் கொடுத்தார்.
2015ம் ஆண்டில், ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய நதீம், 2016 பிப்ரவரியில் இந்தியாவின் கவுகாத்தியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றபோதுதான் மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு, ஹோ சி மின் நகரில் நடைபெற்ற 17வது ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் மற்றும் 2017 மே மாதம் பாகுவில் நடைபெற்ற இஸ்லாமிய ஒற்றுமை விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்று தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார். 2022 காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற 27 வயதான நதீம், 90.18மீட்டர் ஈட்டியை எறிந்து தங்கம் பதக்கம் வென்றார்.
2015ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் சமயம் அவர் வாங்கிய ஈட்டியைத்தான் கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கிறார் . சர்வதேச அளவில் போட்டி போடும் ஒரு தடகள வீரருக்கு பயிற்சி எவ்வளவு அவசியம் என்பதை நாம் சொல்லவேண்டியதில்லை. 9 ஆண்டுகளாக நதீம் பயிற்சிக்கு பயன்படுத்திய ஈட்டி, ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாகிவிட்டது.
தேசிய விளையாட்டு ஆணையத்திடம் “ஒரு ஈட்டிக்காக உதவி புரியுங்கள்” என மன்றாடுகிறார் நதீம். இறுதியாக பல்வேறு சோதனைகளுக்கு பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவருக்கு ஸ்பான்சராக இருக்க சம்மதம் தெரிவிக்கிறது. அந்த அடிப்படையில்தான் மீண்டும் பயிற்சிக்கான ஈட்டியைப் பெற்றார் அர்ஷத். பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. பாகிஸ்தானின் தடகள வரலாற்றில் அந்நாடு பெற்ற முதல் ஒலிம்பிக் தங்கம் அர்ஷத் நதீம் வாங்கிக்கொடுத்தது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நதீமுக்கு பாகிஸ்தான் அரசு, அரசு அதிகாரிகள், பொது நிறுவனங்கள் என பலரும் ரொக்கம், நிலம், அங்கீகாரம் உட்பட பல வெகுமதிகளை வழங்கப்போவதாக அறிவித்தன. இந்நிலையில்தான் தனக்காக அறிவிக்கப்பட்ட அனைத்துப் பரிசுகளையும் நான் பெறவில்லை என நதீம் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் ஜியோ டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், “எனக்காக அறிவிக்கப்பட்ட பரிசுகளில் நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் போலியானவை; எனக்கு அவை எதுவும் கிடைக்கவில்லை. அதைத் தவிர, அறிவிக்கப்பட்ட அனைத்து பணப் பரிசுகளையும் நான் பெற்றிருக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி போலந்தில் சிலேசியா டயமண்ட் லீக் 2025 தொடர் நடைபெற இருக்கிறது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தடகள போட்டிகளில் ஒன்று நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டிதான். ஏனெனில், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டித் தொடருக்குப் பின் இருவரும் நேரடியாக மோதும்போட்டி இதுவாகும். இதனையடுத்து செப்டம்பரில் ஜப்பானின் டோக்கியோ நகரில் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடக்க இருக்கிறது. தனது ஒட்டுமொத்த கவனமும் அடுத்தடுத்த தொடர்கள் மீதே இருப்பதாக நதீம் தெரிவித்திருக்கிறார். “எனக்கு முன் சில முக்கிய இலக்குகள் உள்ளன. நான் எனது தயாரிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக நதீம் தசைக்காயத்தால் (calf injury) பாதிக்கப்பட்டிருந்தார். சமீபத்தில்தான் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், நதீம் தற்போது புனர்வாழ்வு மற்றும் உடலியக்க சிகிச்சையை (physiotherapy) ஆரம்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.