ஈரான், ரஷ்யா-உக்ரைன், லிபியா, வெனிசுலா போன்ற நாடுகளில் போர்கள், தடைகள் காரணமாக உலக எண்ணெய் உற்பத்தியின் 43% பாதிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை, செங்கடல் வழித்தடங்களில் இடையூறுகள், ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்கள், சுத்திகரிப்பு திறன் குறைவு ஆகியவை எரிபொருள் விலை, போக்குவரத்து செலவு, பணவீக்கம் ஆகியவற்றை அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்குகின்றன.
தற்போதைய பதற்றமான போர் சூழலில் உலக எண்ணெய் சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கடியான கட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. போர்கள், எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் ஆகியவை உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 43 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை வழங்கும் நாடுகளை பாதித்துள்ளன.
ஈரான், ரஷ்யா-உக்ரைன், லிபியா போன்ற மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளும், அமெரிக்கக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவும் சேர்ந்து 2025-ல் நாளொன்றுக்கு சுமார் 4.5 கோடி பேரல் எண்ணெயை உற்பத்தி செய்துள்ளன. இது உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 43 சதவீதத்துக்கும் அதிகமாகும்.
இதன் பொருள் அந்த 4.5 கோடி பேரல் முழுவதும் சந்தையில் இருந்து தடுக்கப்பட்டுவிட்டது என்பதல்ல. ஆனால் இந்த நாடுகளில் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு திறன்கள் இந்த ஆண்டு வெவ்வேறு கட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சந்தையின் பாதுகாப்பு இடைவெளி குறைந்துள்ளது.
ஈரானைச் சுற்றியுள்ள பதற்றத்தால் உலகின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வளைகுடா எண்ணெய் விநியோகத்தில் நாளொன்றுக்கு 50 லட்சம் முதல் 70 லட்சம் பேரல் வரை தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
மறுபுறம், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் ரஷ்யாவின் சுத்திகரிப்பு திறன் குறைந்து, எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்யா பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
லிபியாவின் நீடித்த அரசியல் நிலையற்ற தன்மையும் எண்ணெய் உற்பத்திக்கு அச்சுறுத்தலாக உள்ளது. வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதிக்கும் அமெரிக்க கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இதனால் உலக சந்தையில் ஒரே நேரத்தில் பல்வேறு விநியோக அபாயங்கள் உருவாகியுள்ளன.
இந்த சூழலில் அமெரிக்க எண்ணெய் உற்பத்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிற நாடுகளில் ஏற்பட்ட விநியோக இழப்புகளை அமெரிக்க உற்பத்தியாளர்கள் ஓரளவு ஈடு செய்துள்ளனர். எனினும், கடுமையான குளிர்கால வானிலை காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க எண்ணெய் உற்பத்தியும் தற்காலிகமாக நாளொன்றுக்கு சுமார் 20 லட்சம் பேரல் குறைந்தது.
எண்ணெய் சந்தையில் மற்றொரு முக்கிய பிரச்சனை சுத்திகரிப்பு திறன் குறைவு. கச்சா எண்ணெய் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் போன்ற பொருட்களாக மாற்றப்பட்டால்தான் பெரும்பாலான நுகர்வோருக்கு பயன்படும். ஈரான் மற்றும் உக்ரைன் போர்களால் உலகளவில் சுத்திகரிப்பு திறனில் சுமார் பத்தில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் ஏற்கெனவே எரிபொருள் விலையிலும், சரக்கு போக்குவரத்து செலவிலும் எதிரொலிக்கிறது. குறிப்பாக டீசல் விலை உயர்வு, லாரிகள், கப்பல்கள், விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளின் செலவுகளை அதிகரித்து, இறுதியில் பொதுமக்களுக்கான பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
சர்வதேச எரிசக்தி முகமை அவசரகால எண்ணெய் கையிருப்பிலிருந்து வரலாறு காணாத அளவு எண்ணெயை வெளியிட்டுள்ளது. இது தற்காலிகமாக சந்தைக்கு பாதுகாப்பளித்தாலும், உலகளாவிய கையிருப்புகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
ஒரே நேரத்தில் பல பகுதிகளில் அபாயங்கள் உருவாகியிருப்பதுதான் எண்ணெய் சந்தையின் தற்போதைய நெருக்கடியை முந்தைய எண்ணெய் நெருக்கடிகளிலிருந்து வேறுபடுத்துகிறது. ஈரான், ரஷ்யா, உக்ரைன், லிபியா, வெனிசுலா என பல நாடுகளின் உற்பத்தி அல்லது ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹோர்முஸ் மற்றும் செங்கடல் போன்ற முக்கிய கடல்வழிகளும் ஆபத்தில் உள்ளன.
இதன் தாக்கம் இந்தியா போன்ற முக்கிய எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு அதிகம். கச்சா எண்ணெய் விலை நீண்ட காலம் உயர்ந்தால், இறக்குமதி செலவு, பணவீக்கம், வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கலாம்.
எனவே, தற்போதைய நெருக்கடியின் முக்கிய கேள்வி உலகம் எவ்வளவு எண்ணெயை செலவழித்துள்ளது என்பதல்ல; அடுத்த விநியோக அதிர்ச்சி ஏற்பட்டால் அதை சமாளிக்க எவ்வளவு உபரி திறன் மீதமுள்ளது என்பதுதான்.