\
Barron Trump & Donald Trump
Barron Trump & Donald Trump Reuters

டிரம்ப் மகன் மீது திரும்பிய ஈரானின் பார்வை.. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சித் தகவல்!

பாரன் டிரம்பை குறிவைத்து ஈரான் அரசு ஊடகம் வீடியோ வெளியிட்டிருப்பது உளவியல் போர் தந்திரமா அல்லது நேரடி கொலை மிரட்டலா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
Published on
Summary

ஈரான்–அமெரிக்க–இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்த நிலையில், முன்னாள் உச்சத் தலைவர் காமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் சூழலில், அரசுப் பதவி ஏதும் இல்லாத பாரன் டிரம்பை குறிவைத்து வீடியோ வெளியாகியுள்ளது. IRIB ஒளிபரப்பிய இந்த காட்சி, ஈரான் அரசின் நேரடி நடவடிக்கையா, அரசு ஊடகத்தின் உளவியல் பிரச்சாரமா, அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் ஆத்திரமூட்டும் முயற்சியா என்ற கேள்விகளை எழுப்பி, இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ–அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது.

செய்தியாளர் - M. மீரா

பிப்ரவரி மாதம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய மோதலின் தொடக்கத்தில், ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செய்திகளை ஈரானின் தீவிரப் போக்குடைய ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் மீது இதற்கு முன்பும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தாலும், அவர்களது மகன் பாரன் பொதுவெளியில் குறிவைக்கப்பட்டுள்ளார்.

Barron Trump
Barron Trump Screen Shot X

வெளியிடப்பட்டிருக்கும் சுமார் மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், "Barron Trump பாரன் டிரம்ப்பை எங்கே கொல்வது?!" ("Where to kill Barron Trump?!") என்ற ஆங்கில வாசகத்துடன் தொடங்குகிறது. மேலும், நியூயார்க்கில் உள்ள 'டிரம்ப் டவர்' (Trump Tower) உள்ளிட்ட, இளைய டிரம்ப் பொதுவெளியில் நேரத்தைச் செலவிடும் இடங்களைக் காட்டும் வகையிலான வரைபடக் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

வீடியோவின் கடைசியில், எங்கள் 10 மில்லியன் டாலர் பரிசை பெறுவதற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்று வர்ணனையாளர் குறிப்பிடுகிறார்.

ஈரானிய ஆட்சியின் தீவிரப் போக்குடையவர்களுடன் இணக்கமானதாகக் கருதப்படும் அரசு ஊடகமான IRIB, ஊடகம் வார இறுதியில் இந்த வீடியோவை ஒளிபரப்பியது. இந்த ஊடக நிறுவனத்தின் தலைவர் ஈரானின் உச்சத் தலைவரால் நேரடியாக நியமிக்கப்படுகிறார்.

ஆனால், இந்த வெகுமதி அறிவித்த வீடியோ ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ நடவடிக்கையா, அரசு ஊடகத்தின் உளவியல் பிரச்சாரமா அல்லது அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலான ஆத்திரமூட்டும் ஒளிபரப்பா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Barron Trump
Barron Trump Reuters

இந்த விவகாரத்தை மேலும் கவனிக்க வைப்பது என்னவென்றால், பாரன் டிரம்ப் எந்தவொரு அரசுப் பதவியையும் வகிக்கவில்லை என்பதுதான். அமெரிக்காவின் ஈரான் கொள்கையைத் தீர்மானிப்பதிலும் அவருக்கு நேரடியான பங்கு இல்லை. இதற்கு முன்பு ஈரானுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்கள் பெரும்பாலும் டொனால்ட் டிரம்ப், தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகள், குறிப்பாக காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடையவர்களை மையமாகக் கொண்டிருந்தன.

2020-ல் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஈரானின் QUDS படைத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதிலிருந்து, பழிவாங்குவோம் என ஈரான் தொடர்ந்து கூறி வந்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரைக் கொல்வோர் அல்லது சிறைபிடித்து ஒப்படைப்போருக்கு 30,000 டாலர் வெகுமதி வழங்கப்படும் என்றும், அதை ஈரானியப் பெண் ஒருவர் செய்தால் 60,000 டாலராக உயர்த்தப்படும் என்றும் ஈரானிய ராணுவத் தளபதி அமீர் ஹதாமி அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

US troops in Iran
US troops in Iran reuters

மேலும், ஈரான் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என்றும், அந்த பதிலடி அசல் தாக்குதலை விட பெரியதாக இருக்கக்கூடும் என்றும் ஈரானிய ராணுவத் தரப்பு எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரித்து வரும் சூழலில், ராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்பை முற்றிலும் நிராகரிக்கவில்லை என டொனால்ட் ட்ரம்ப் கூறியிருப்பதும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு, அமெரிக்கா–ஈரான் மோதல் வெறும் பொருளாதார மற்றும் தூதரக அழுத்தத்துடன் நிற்காமல் , நேரடியான ராணுவ அச்சுறுத்தல் மற்றும் உளவியல் போர் நிலைக்கும் நகர்ந்து வருவதாக பார்க்கப்படுகிறது.

Barron Trump & Donald Trump
ஈரானுக்கு பெரிய வெற்றி.. அதிர்ந்த அமெரிக்கா.. ராணுவத் தளங்கள் கூண்டோடு மாற்றம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com