clear weapon  Reuters
உலகம்

அணு ஆயுதங்கள் ... அமெரிக்கா, சீனாவுக்குப் போட்டியாக இந்தியா செய்த செலவு எவ்வளவு?

ரூ.40 லட்சம் கோடி செலவிட்ட உலக நாடுகள்: இந்தியாவின் பங்கு என்ன?

PT WEB

செய்தியாளர் - M.மீரா

உலக நாடுகள் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அணு ஆயுதங்களை நவீனப்படுத்தவும், கையிருப்பை அதிகரிக்கவும் உலக நாடுகள் சுமார் ரூ.40 லட்சம் கோடியை வாரி இறைத்துள்ளன.

அணு ஆயுதங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 474 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.40 லட்சம் கோடி) செலவிட்டுள்ளதாக சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு அமைப்பான ICAN தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்கா மட்டும் பாதிக்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளது.

nuclear weapon

2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் உலகின் 9 அணு ஆயுத நாடுகள் மேற்கொண்ட செலவுகள் குறித்த விவரங்களை ICAN வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்கா 265 பில்லியன் டாலர் செலவிட்டு முதலிடத்தில் உள்ளது. சீனா 59 பில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்திலும், பிரிட்டன் 46 பில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ரஷ்யா 43 பில்லியன் டாலர், பிரான்ஸ் 33 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளன. இந்தியா 12 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் தலா 6 பில்லியன் டாலரும், வடகொரியா 4 பில்லியன் டாலரும் செலவிட்டுள்ளன.

அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 2026-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி ரஷ்யா சுமார் 4,400 அணு ஆயுதங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் 3,700 அணு ஆயுதங்கள் உள்ளன. இரு நாடுகளிடமும் சேர்த்து சுமார் 8,100 அணு ஆயுதங்கள் உள்ளன. இது உலக நாடுகளின் மொத்த அணு ஆயுதங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

nuclear weapon

சீனா 620 அணு ஆயுதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைவிட அதன் அணு ஆயுத எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் அணு ஆயுத எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகரித்து 190 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானின் எண்ணிக்கையில் மாற்றமில்லை.

இஸ்ரேலிடம் 90 அணு ஆயுதங்களும், பிரான்சிடம் 290 அணு ஆயுதங்களும், பிரிட்டனிடம் 225 அணு ஆயுதங்களும் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வடகொரியாவின் அணு ஆயுத எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்து 60 ஆக உயர்ந்துள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளிலேயே இதுதான் அதிகபட்ச சதவீத உயர்வாகும்.

இவ்வாறு உலக நாடுகள் அணு ஆயுதங்களுக்காகப் பெரும் தொகையைச் செலவிட்டு வரும் நிலையில், 2026-ம் ஆண்டில் உலகின் 9 அணு ஆயுத நாடுகளிடமும் சேர்த்து மொத்தம் 9,745 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.