ட்ரம்ப், கிம் ஜாங் உன் எக்ஸ் தளம்
உலகம்

”மோதலை தூண்டுகிறது..” தென்கொரியாவில் அமெரிக்கா போர்க்கப்பல்.. வடகொரியா குற்றச்சாட்டு!

தங்களது நாட்டிற்கு எதிராக ஆத்திரமூட்டும் செயல்களை அமெரிக்கா செய்துவருவதாக வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது.

Prakash J

அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் கொரிய நாடுகளில் வடகொரியா முன்னிலையில் உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

கிம் ஜாங் உன்

வடகொரியா இந்த அளவிற்கு ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுதான்.

இந்த நிலையில், தங்களது நாட்டிற்கு எதிராக ஆத்திரமூட்டும் செயல்களை அமெரிக்கா செய்துவருவதாக வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது. தென்கொரியாவின் பூஷண் துறைமுகத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

போர் ஒத்திகை பயிற்சிக்காக அவை கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்காவின் இந்த செயல் மோதலை தூண்டும் வகையில் இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய அரசாங்கம் வடகொரியாவிற்கு எதிரான அரசியல், ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை கையாண்டு வருவதாக அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார். இது முந்தைய அரசின் விரோத கொள்கையை முன்னெடுத்து செல்லும் செயல் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

ட்ரம்ப், கிம் ஜாங் உன்

முன்னதாக, அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப், மீண்டும் பதவியேற்ற நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்திக்கும் திட்டம் இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, அவர் அளித்த பேட்டியில், “கிம் ஒரு புத்திசாலி. அவர் மதவெறியர் அல்ல. கிம் ஜாங் உன் சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர்” எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கிம்மின் சகோதரி அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.