Kim jong un  ani
உலகம்

கடலுக்கு அடியில் ஏவுகணைச் சோதனை! அமெரிக்காவை அதிரவைக்கும் வடகொரியா.. அடுத்த இலக்கு என்ன?

நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணைகளைச் சோதித்து, கடலுக்கு அடியில் தாக்குதல் நடத்தும் திறனை மேம்படுத்தும் வடகொரியா

PT WEB

அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் புதிய சவாலை ஏற்படுத்தும் வகையில், நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவக்கூடிய ஏவுகணைகளைச் சோதித்திருக்கிறது வடகொரியா. ஏற்கெனவே அணு ஆயுதங்களையும், நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளையும் உருவாக்கி வரும் வடகொரியா, இப்போது கடலுக்கு அடியில் இருந்தும் தாக்குதல் நடத்தும் திறனை மேம்படுத்த முயற்சி செய்கிறது. இந்தச் சோதனையின் பின்னணி என்ன?

அக்டோபர் 14-ம் தேதி, வடகொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் இரண்டு வகையான க்ரூஸ் ஏவுகணைகள் சோதிக்கப்பட்டதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தனது கடற்படையின் தாக்குதல் திறனை மேம்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா கூறியுள்ளது.

kim jong un

பொதுவாக, தரையிலிருந்து ஏவுகணை செலுத்தப்பட்டால், அதன் ஏவுதளத்தைக் கண்காணித்து எதிரி நாடுகள் தாக்குதலைக் கண்டறிய முயற்சி செய்யலாம். ஆனால், கடலுக்கு அடியில் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை செலுத்தப்பட்டால் அது எங்கிருந்து தாக்குதல் நடத்தும் என்பதை முன்கூட்டியே கண்டறிவது கடினமாக வாய்ப்புள்ளது. இந்தச் சோதனையில் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல், 2023-ல் வடகொரியா அறிமுகப்படுத்திய ஹீரோ கிம் குன் ஓக் என்ற கப்பலாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்தச் சோதனை உண்மையான நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து நடத்தப்பட்டதா, அந்தக் கப்பல் முழுமையான செயல்பாட்டுத் திறனைப் பெற்றுள்ளதா என்பதை அவர்கள் தெளிப்படுத்தவில்லை.

kim jong un

கப்பலில் இருந்து ஏவுகணைகளைச் செலுத்தும் திறன் வளர்ந்தால், எதிரி நாடுகள் தங்கள் கடல் எல்லைகளையும் பாதுகாப்பு அமைப்புகளையும் கூடுதல் கவனத்துடன் கண்காணிக்க வேண்டியிருக்கும். அதனால் இந்தத் தொழில்நுட்பம் மற்ற நாடுகளுக்குக் கவலை அளிக்க வாய்ப்புள்ளது.

இந்த ஒரு சோதனையை வைத்து வடகொரியா முழுமையான நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைத் தாக்குதல் திறனைப் பெற்றுவிட்டது என்று கூற முடியாது. இப்போதைக்கு, கடலுக்கு அடியில் இருந்தும் தாக்குதல் நடத்தக்கூடிய தனது ராணுவத் திறனை மேம்படுத்த வடகொரியா முயற்சி செய்து வருகிறது.