வடகொரியா தனது ‘சோய் ஹியோன்’ டெஸ்ட்ராயர் கப்பலிலிருந்து 5 ஏவுகணைகளை சோதனை செய்து உலக கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் 2 குரூஸ், 3 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் அடங்கும். போர்க் கப்பல்களை துல்லியமாக தாக்கும் இந்த ஏவுகணைகளை தடுக்க கடினம் என்பதால், அமெரிக்க கடற்படை ஆதிக்கத்துக்கு இது பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. கிம் ஜாங் உன் நேரில் கண்காணித்து, கடற்படை வலுவூட்ட உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர் - விக்னேஷ்
வடகொரியா தொடர்ந்து ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது என்பது உலகம் அறிந்த விஷயம். இப்படி இருக்கையில், மிக முக்கியமான ஆயுத சோதனையை நடத்தி உலகநாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது. அதாவது போர்க் கப்பல்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஏவுகணைகள் வடகொரியாவில் சோதனை செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வகை ஏவுகணைகளை தடுத்து நிறுத்துவது நடக்காத காரியம். எனவேதான் அமெரிக்காவுக்கு வடகொரியாவின் இந்த சோதனை பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
வடகொரியா, தனது 'சோய் ஹியோன்' (Choe Hyon) ரக டெஸ்ட்ராயர் கப்பலிலிருந்து இந்த ஏவுகணைகளை சோதித்து பார்த்திருக்கிறது. மொத்தம் 5 ஏவுகணைகள் சோதித்து பார்க்கப்பட்டிருக்கின்றன. இதில் 2 குரூஸ் ரக ஏவுகணை. மீதமுள்ள 3 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள். இதில் குரூஸ் ரக ஏவுகணைகள் சுமார் 2 மணி நேரம் பறந்திருக்கின்றன. அதேபோல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் சுமார் 32 நிமிடங்கள் வரை பறந்திருக்கின்றன.
இந்த சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டிருக்கிறார். பார்வையிட்டதுடன் நிற்காமல், அடுத்த கட்ட கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். இந்த ஏவுகணையை விட முக்கியம், ஏவுகணை ஏவப்பட்ட 'சோய் ஹியோன்' கப்பல்தான். இது டெஸ்ட்ராயர் வகை கப்பல். அதாவது, ஒரு விமானம் தாங்கி கப்பலுக்கு 4-5 டெஸ்ட்ராயர் கப்பல்கள் பாதுகாப்புக்கு செல்லும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது.
வடகொரியாவிடம் பெரிய நவீன கப்பல்கள் கிடையாது. தற்போதுதான் புதிய கப்பல்களை கட்டமைத்து வருகிறது. அந்த வகையில் இந்த கப்பல் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இந்த கப்பல் கட்டுமானத்தில் இருக்கிறது. இது 3 -4வது கப்பலாகும். இந்த கப்பல்களை இந்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்றும், ஆண்டுக்கு 2 போர் கப்பல்களை புதியதாக சேர்க்க வேண்டும் என்றும் வடகொரியா பிளான் செய்திருக்கிறது.
இதெல்லாம் யாருக்கு முக்கியமோ? இல்லையோ.. அமெரிக்காவுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் ஈரான் கடல் பகுதியில் அமெரிக்கா தனது கப்பல்களை நிலை நிறுத்தியிருக்கிறது. உலகில் தன்னை யாரும் தடுக்க முடியாது என்று நினைத்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு, வடகொரியா இந்த புதிய ஏவுகணை சோதனையின் மூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.