ஜேடி வான்ஸ் pt web
உலகம்

”none of America's business” - போர் குறித்து அமெரிக்க துணை அதிபர் பதில்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் சூழல் மேலும் மேலும் அதிகரித்து வரும் நிலையில், ட்ரம்பின் நிர்வாகம் போரில் நேரடியாகத் தலையிடப்போவதில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.

அங்கேஷ்வர்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லைகளிலும் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் விமான நிலையங்கள் மூடல்

இந்தியாவில் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் விடிய விடிய சைரன் ஒலிகள் கேட்கின்றன. டெல்லி, மும்பை என பல பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்ட நிலையில் தலைநகரான இஸ்லாமாபாத் இந்தியாவின் தாக்குதல் வளையத்திற்குள் வந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் என பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். பல்வேறு மாநிலங்களில் அரசு அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ட்ரம்பின் நிர்வாகம் போரில் நேரடியாகத் தலையிடப்போவதில்லை என அமெரிக்காவின் துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்புடன் பேசி பதற்றத்தைக் குறைக்க அழைப்பு விடுத்து சில மணி நேரங்களுக்குப் பின் வான்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “அடிப்படையில் எங்களுக்குச் சம்பந்தமில்லாத மற்றும் அமெரிக்காவின் கட்டுப்படுத்தும் திறனுடன் எந்த தொடர்புமில்லாத ஒரு போரின் நடுவில் நாங்கள் தலையிடப்போவதில்லை. ஆயுதங்களை கீழே போடச் சொல்லி இந்தியர்களுக்கு அமெரிக்காவால் சொல்ல முடியாது. பாகிஸ்தானியர்களையும் சொல்ல முடியாது. எனவே, இந்த விவகாரத்தை ராஜதந்திர வழிகள் மூலமே தொடரப்போகிறோம். இது பிராந்தியப் போராகவோ அல்லது அணு ஆயுதப்போராகவோ மாறிவிடப்போவதில்லை என்பதுதான் எங்களது நம்பிக்கை. இப்போதைக்கு அது நடக்காது என்றே நினைக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து பேசியிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இரு நாடுகளையும் நன்கு அறிவேன். பிரச்னை சரிசெய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்., என்னால் எதாவது உதவி செய்ய முடிந்தால் நான் அங்கே இருக்க விரும்புகிறேன். மிக விரைவாக போர் முடிவுக்கு வருமென்று நன் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.