கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்து ஒரு கூட்டு ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது தெற்காசிய பிராந்தியத்தின் வலிமையான ராணுவ கூட்டணியாக கருதப்பட்டது.
இந்த சூழலில் இந்த கூட்டணியில் துருக்கியும் இணைந்து இந்த மூன்று நாடுகளும் ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மற்ற நாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று நேட்டோ பாணியிலான அம்சமும் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானின் அணு ஆயுத திறன், சவூதியின் பணபலம், துருக்கியின் தொழில்நுட்பம் என இந்த கூட்டணி நேட்டோ கூட்டணிக்கு பிறகு உலகின் இரண்டாவது பெரிய ராணுவ கூட்டணியாக உருவெடுத்துள்ளது.
இதனிடையே இஸ்லாமிய உலகின் தலைமை இடத்துக்காக சவூதி அரேபியாவும் ஈரானும் நீண்ட நாட்களாக பனிப்போரில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் ஈரானுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் சன்னி இஸ்லாமியர்களை பெரும்பான்மையான கொண்ட நாடுகளின் இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தை சியா இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட ஈரான் எச்சரிக்கையோடே அணுகி வருகிறது.
இந்த நிலையில், துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான இந்த பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தமும் அவர்களுக்கு பாதுகாப்பை தராது என்பதை சவுதி அரேபியர்கள் உணர வேண்டும் என ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஈரான் நாட்டின் எம்பியும், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை ஆணையத்தின் உறுப்பினரான இப்ராஹிம் ரெசாய் (Ebrahim Raisi), சவுதி அரேபியா பல தசாப்தங்களாக அமெரிக்காவை சார்ந்து இருந்தது அவர்களுக்கு பாதுகாப்பை தரவில்லை என்று விமர்சித்துள்ளார்.
மேலும், தற்போது துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளோம் என்று நம்பினாலும், அது அவர்களுக்கு பாதுகாப்பு தராது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும், இத்தகைய ஒப்பந்தத்திற்கு பதில் சவுதி அரேபியா தனது கொள்கைகளை சீரமைத்து கொண்டால் மட்டுமே நாட்டின் பாதுகாப்பிற்காக மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.