nalin haley x page
உலகம்

அமெரிக்க குடியேற்றத்திற்கு எதிர்ப்பு.. களத்தில் குதித்த நிக்கி ஹாலே மகன்! சிக்கலில் H1B விசா ?

ஐ.நா. முன்னாள் தூதர் நிக்கி ஹாலேவின் மகன் நலின் ஹாலே, H-1B விசாக்களை முடிவுக்குக் கொண்டுவரவும், சட்டப்பூர்வ குடியேற்றத்தை நிறுத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.

Prakash J

ஐ.நா. முன்னாள் தூதர் நிக்கி ஹாலேவின் மகன் நலின் ஹாலே, H-1B விசாக்களை முடிவுக்குக் கொண்டுவரவும், சட்டப்பூர்வ குடியேற்றத்தை நிறுத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H1B விசா விண்ணப்பக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

H1B விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக 1 லட்சம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.90 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும்” என்ற உத்தரவை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பிறப்பித்திருந்தார். ஹெச்-1பி விசா காரணமாக வேலை இழக்கும் அமெரிக்கர்களை பாதுகாக்கவே விசா கட்டணம் உயர்த்தப்பட்டதாக அமெரிக்க அரசு விளக்கம் அளித்திருந்தது. மேலும் இது, செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 12 மாதங்கள் வரை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.

trump, h1 b visa

இந்த நிலையில், ஐ.நா. முன்னாள் தூதர் நிக்கி ஹேலேவின் மகன் நலின் ஹேலி, 'H-1B விசாக்களை முடிவுக்குக் கொண்டுவரவும், சட்டப்பூர்வ குடியேற்றத்தை நிறுத்தவும்' அழைப்பு விடுத்துள்ளார். "அமெரிக்காவில் இளைஞர்களின் வேலையின்மைக்கு வெளிநாட்டு தொழிலாளர்களே காரணம் என்று குற்றம்சாட்டிய அவர், அமெரிக்காவை வெறுக்கும் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.

லண்டனை தளமாகக் கொண்ட செய்தி வலைத்தளமான அன்ஹெர்டுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "H-1B விசாக்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். சட்டப்பூர்வ குடியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். இளம் அமெரிக்கர்களுக்குச் செல்ல வேண்டிய வேலைகளை வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். என் நண்பர் குழுவில் உள்ள அனைவரும் சிறந்த பள்ளிகளில் பட்டம் பெற்றவர்கள், சிறந்த பட்டங்களைப் பெற்றவர்கள், ஒன்றரை வருடங்கள் ஆகின்றன, அவர்களில் ஒருவருக்கும் வேலை இல்லை. பிரிட்டிஷ்-அமெரிக்க பத்திரிகையாளர் மெஹ்தி ஹசனை அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற வேண்டும். அவர் அமெரிக்காவை வெறுக்கிறார். நீங்கள் அமெரிக்காவை வெறுத்தால், அமெரிக்காவில் இருக்கக்கூடாது. எல்லோரும் அதை மிகவும் சிக்கலாக்க விரும்புகிறார்கள்.

கடந்த தலைமுறையின் விஷயம் இதுதான். அவர்கள் எப்போதும் விதிகள், ஒழுங்குமுறைகள், செயல்முறை பற்றிப் பேசுகிறார்கள். உங்களுக்கு அமெரிக்கா பிடிக்கவில்லை என்றால், வெளியேறுங்கள். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் பாதுகாப்பான வேலைவாய்ப்பு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நிலையான வாழ்க்கை நிலைமைகள் கிடைக்கும் வரை அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

nalin haley

முன்னதாக, அவரது தாயாரான நிக்கி ஹாலே, நீண்டகால வணிக மற்றும் தகுதி அடிப்படையிலான குடியேற்றத்திற்கு ஆதரவளித்திருந்தவர் ஆவார். ஆனால், அவரது மகன் நலின் ஹாலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.