இன்று மோசடிகள் பல்வேறு வழிகளிலும் அதிகரித்து வருகின்றன. அதனால் பலரும் பெருந்தொகையை இழப்பதுடன், மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் மோசடிக் கும்பல் ஒன்று, குழந்தையில்லா தம்பதிகுளை குறிவைத்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தது பிபிசி ஊடகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில்தான் இந்த மோசடி அரங்கேறியுள்ளது. காரணம், உலகில் அதிக குழந்தை பிறப்பு விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், அங்குள்ள பெண்கள் ஒவ்வொருவரும் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள்.
அதேநேரத்தில் கருத்தரிக்க முடியாத ஒருசில பெண்கள் மட்டும் மிகப்பெரிய சமூக அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இதிலிருந்து மீள்வதற்காக அவர்கள், எப்படியாவது கரு தரித்தால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அந்த வகையில்தான் இப்படியான ஒரு மோசடி நடைபெற்றதை பிபிசி நிரூபித்துள்ளது. அந்த ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் கருவுறுதல் சிகிச்சை தேடும் தம்பதிகளாக தங்களை காட்டிக்கொண்டு ரகசியமாக, அங்குள்ள போலி மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளனர். அவர்களும், அதற்கான சிகிச்சை தங்களிடம் இருப்பதாகக் கூறி அதற்கான மருந்து மற்றும் ஊசிகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன், இதற்கு தொகை அதிகமாகும் எனவும் தெளிவுப்படுத்தியுள்ளனர். அதன்படி, இந்த ஆரம்ப சிகிச்சைக்கு மட்டும் ரூ.17.500 செல்வாகுமாம்.
அதற்கு ஒப்புக்கொண்ட பிபிசி ஊடகத்தினர் சிகிச்சையையும் எடுத்துள்ளனர். இதனால் அவர்களது வயிறு கர்ப்பிணியைப் போல் காட்டியுள்ளது. உடனே, அந்த மருத்துவர்கள் ‘நீங்கள் கர்ப்பம் தரித்துவிட்டீர்கள்’ எனக் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். என்றாலும், அந்த போலி மருத்துவர்கள் அடுத்தாக அவர்களிடம் சில கண்டிஷன்களைப் போட்டுள்ளனர். அதாவது, ’வேறு மருத்துவர்களிடம் போகக்கூடாது, கர்ப்பத்தை செக் செய்ய சோனோகிராம் டெஸ்ட் எடுக்கக்கூடாது. குழந்தை கர்ப்பப்பைக்கு வெளியே வளர்வதாகவும் இதனால் சோனோகிராம் சிகிச்சையில் அது தெரியாது என்பதாலேயே இந்த கண்டிஷன்கள் என தெரிவித்துள்ளனர்.
இந்த போலி முகத்தை உறுதிப்படுத்திக் கொண்ட ஊடகத்தினர், அங்குள்ளவர்களிடம் இதுகுறித்து பேச்சு கொடுத்துள்ளனர். அவர்களும் தங்களுக்கு இதே சிகிச்சை தான் நடந்ததாகத் தெரிவித்துள்ளனர். அதிலும் இந்த விஷயம் தெரியாத பெண்மணி ஒருவர், தனது குழந்தையை 15 மாதம் சுமந்ததாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அவர்கள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், டெலிவரிக்கு மருத்துவர்கள் ஒரு டைம் சொல்வார்களாம். அப்போது மருத்துவமனைக்கு சென்றால் பிரசவ வலி வர காஸ்ட்லியான மருந்தை தர வேண்டும் என சொல்லி அதற்கும் பணத்தைப் பறிப்பார்களாம்.
பணத்தை பெற்றபிறகு, அந்தப் பெண்களுக்கு மயக்க ஊசி போட்டு சிசேரியன் அறுவைச்சிகிச்சை செய்ததுபோல கீறலைப்போட்டு குழந்தை பெற்றதாக காட்டுவார்களாம். அதேநேரத்தில், குழந்தையை தம்பதிகளிடம் காட்ட மாட்டார்களாம். உண்மையிலேயே குழந்தை பிறந்தால்தானே அவர்கள் காட்டுவார்கள். அதேநேரத்தில், குழந்தைக்குத் தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும் எனச் சொல்லி அதற்கும் பணம் பறிப்பார்களாம்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் போலி மருத்துவர்கள் இளம்பெண்களை கடத்திவந்து, அவர்களை விருப்பத்திற்கு மாறாக கருவுற வைக்கிறார்கள். அவர்களுக்கு பிரசவம் நடந்தவுடன், வலுக்கட்டாயமாக குழந்தைகளை பிடுங்கி ஏமாற்றிய தம்பதிகளுக்கு தந்துவிடுகிறார்களாம். இதுபோல அங்கு பல நூறு பெண்களை அவர்கள் ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.