விஷ வாயு chat Gpt
உலகம்

கச்சா எண்ணெய் திருட முயற்சி.. 37 பேர் உயிரிழந்த பயங்கரம்.. நைஜீரியாவில் நடந்தது என்ன?

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் சட்ட விரோதமாக கச்சா எண்ணெய் திருட முயன்றபோது விஷவாயு தாக்கி 37 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Premkumar S

நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க ரிவர்ஸ் மாகாணத்தின் ஒக்ரிகா பகுதியில் உள்ள ஒகாரி ஜெட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு எண்ணெய் குழாயில், 200-க்கு மேற்பட்டோர் படகுகளில் சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் திருட முயன்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக உயர் அழுத்தத்தில் கச்சா எண்ணெய் வெளியேறியபோது, அதிலிருந்து பரவிய நச்சுப் புகையை அங்கிருந்தவர்கள் சுவாசித்ததாக கூறப்படுகிறது. இதில் பலர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததுடன், சிலர் ஆற்றில் விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Crude oil

இந்த சம்பவத்தில் இதுவரை 37 உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில், மயங்கி விழுந்த பலர் ஆற்றில் விழுந்த நிலையில், அவர்களில் சிலர் காணாமல் போயிருப்பதாகவும் சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நைஜீரிய காவல்துறையும் உறுதி செய்துள்ளது.

நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க நைஜர் டெல்டா பகுதியில், கச்சா எண்ணெய் திருட்டு மற்றும் எண்ணெய் குழாய்களில் சட்டவிரோதமாக இணைப்புகளை ஏற்படுத்துவது நீண்டகாலமாக மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதுபோன்ற சட்டவிரோத எண்ணெய் திருட்டு நடவடிக்கைகள், தீ விபத்துகள், நச்சுப் புகை பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், தற்போது நடந்துள்ள இந்தச் சம்பவம், நைஜீரியாவில் சட்டவிரோத எண்ணெய் திருட்டின் மற்றொரு ஆபத்தான முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.