அமெரிக்காவில் தற்காலிக விசாக்களில் தங்கியிருந்து நிரந்தரக் குடியுரிமைக்கான ‘கிரீன் கார்டு’க்கு (Green Card) விண்ணப்பிப்பவர்கள், இனி அமெரிக்காவை விட்டு வெளியேறி தங்களது சொந்த நாடுகளுக்குச் சென்றுதான் அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, பலர் குடியுரிமை பெறாமல் அமெரிக்காவிலேயே தங்கிவிடுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதுவரை அமெரிக்காவில் இருந்தபடியே தங்களது விசா நிலையை மாற்றுதல் மற்றும் கிரீன் கார்டு விண்ணபிப்பதற்கான வசதி இருந்துவந்தது. புதிய விதியின்படி, விதிவிலக்கான சூழல்களைத் தவிர மற்றவர்கள் தங்களின் சொந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று அங்கிருந்தபடிதான் விண்ணப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் எச்-1பி (H- 1B) போன்ற பணி விசாக்களில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஏற்கெனவே இந்தியர்களுக்கான கிரீன் கார்டுக்கான காத்திருப்பு பல ஆண்டுகள் நீடித்துவரும் நிலையில், புதிய உத்தரவு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எச்-1பி போன்ற விசாக்களை வைத்திருப்பவர்களுக்கும், அமெரிக்கப் பொருளாதாரத்துக்குப் பங்களிக்கும் உயர் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கும் இதில் சில சலுகைகள் அல்லது விதிவிலக்குகள் அளிக்கப்படலாம் என்று அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இருப்பினும், இந்த புதிய விதிமுறை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தம்பதிகள் மற்றும் குடும்பங்களிடையே பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.